கிள்ளனுரில் 13 ஆம் நூற்றாண்டு நடுக்கல் கல்வெட்டு கண்டெடுப்பு!
புதுக்கோட்டை அருகே ஊரணிக் கரையில், 13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 3 நடுகல் தூண் கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டம், கிள்ளனூர் கிராமத்தில் உள்ள பூவன் ஊரணிக் கரையில் எழுத்துகள் பொறிக்கப்பட்ட கல் தூண்கள் இருப்பதாக கிள்ளனூரைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் அளித்த தகவலை அடுத்து தொல்லியல் ஆர்வலர்கள் பேரா. சுப. முத்தழகன், முருகபிரசாத், நாராயண மூர்த்தி, ராகுல் பிரசாத் ஆகியோரைக் கொண்ட குழுவினர் நேரில் சென்று ஆய்செய்தனர்.
இந்த ஆய்வு குறித்து பேராசிரியர் சுப. முத்தழகன் கூறியது: பூவன் ஊரணிக் கரையில் இருந்த 3 நடுகல் தூண் கல்வெட்டுகள் இருந்தன. அவற்றில் இரு தூண்கள் பாதியாக உடைந்த நிலையிலும், ஒரு தூண் முழுமையாகவும் உள்ளன. இந்த தூண்கள் முதலில் ஊரணி கரையில் நடப்பட்டு இருந்ததாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். உடைந்த தூண்கள் இரண்டும் 2.5 அடி உயரமும், 1 அடி அகலமும் கொண்டதாக உள்ளன. அவற்றி ஒரு தூணில், 'சோறன் சோழன்ஆன இளஞ்சிங்க பேரையன்' என்றும், மற்றொரு தூணில் 'சோறன் ஆன தெங்குல தரையன்' என்றும் நடுகல் வீரர்களின் பெயர்கள் எழுதப்பட்டுள்ளன. முழுமையாக உள்ள மூன்றாவது தூண் 6 அடி உயரமும் 1 அடி அகலமும் கொண்டதாக உள்ளது.
இந்தத் தூணில் 'திருவன் மாயியான வளநாடன்' என்று எழுதப்பட்டுள்ளது. இந்தக் கல்வெட்டுகளின் எழுத்தமைதியைக் கருத்தில் கொண்டு இவை கிபி 13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.இந்தத் தூண்களின் தலைப்பகுதி வட்ட வடிவிலும், கழுத்துப் பகுதியில் வரைந்த கோடுகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுபோன்ற நடுகல் வீரர்களின் பெயர்கள் பொறித்த நடுகல் தூண்கள் செவ்வலூர், நெருஞ்சிக்குடி, வாழைக்குறிச்சி, கொன்னையூர், திருநல்லூர், சாரணக்குடி கிராமங்களில் கிடைக்கப் பெற்றுள்ளன என்றார் முத்தழகன்.