14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: தேநீர்க்கடை தொழிலாளி கைது

X
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் சரகத்திற்குட்பட்ட ஒரு கிராமத்தை சேர்ந்த 9 ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமி. அதே பகுதியை சேர்ந்த பாலமுருகன் (32), தேநீர்க்கடையில் பணியாற்றி வருகிறார். சிறுமியின் வீடு இருக்கும் பகுதியில் பாலமுருகன் வசித்து வரும் சூழலில், சிறுமி அவருடன் சகஜமாக பேசி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 1 ஆம் தேதி, சிறுமியின் பெற்றோர் வெளியில் சென்று இருந்ததால், சிறுமி மட்டுமே வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, சிறுமியின் வீட்டிற்கு சென்ற பாலமுருகன், சிறுமியிடம் பேச்சுக்கொடுத்து, பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதனால், பாதிக்கப்பட்ட சிறுமி திங்கள்கிழமை பள்ளிக்கு செல்ல முடியாது என பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். பெற்றோர் சிறுமியிடம் விசாரித்த போது நடந்த விபரத்தை கூறியுள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர், பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், பாலமுருகனை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் சிறுமியை பாலமுருகன் பாலியல் வன்புணர்வு செய்தது உண்மை எனத் தெரியவந்தது. இதையடுத்து, காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, பாலமுருகனை கைது செய்தனர்.
Next Story

