அடையாறு கூவம் நதியில் மூழ்கி 14 வயது சிறுவன் உயிரிழப்பு
கோப்பு படம்
சென்னை ஜாபர்கான் பேட்டையைச் சேர்ந்தவர்கள் விஜயகுமார், ஜோதி தம்பதியினர் விஜயகுமார் அப்பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர்களுடைய மகன் தனுஷ் அருகில் இருக்கக்கூடிய தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று ரமலான் பண்டிகை விடுமுறை தினம் என்பதால் வீட்டின் அருகில் இருக்கக்கூடிய அடையாறு கூவம் நதியருகே நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படும் நிலையில்,
எதிர்பாராத விதமாக அடையாறு கூவம் நதியில் தனுஷ் மற்றும் அவருடைய நண்பர்கள் இறங்கியதாக தெரிகிறது. இதில் தனுஷ் நீச்சல் தெரியாமல் நதியின் உள்ளே முழுகியதைக் கண்டு அவரது 2 நண்பர்கள் காப்பாற்ற முயன்றுள்ளனர் ஆனால் முயற்சி பலனளிக்காமல் பயந்து போன தனுஷின் நண்பர்கள் யாருக்கும் சொல்லாமல் அவர்களது வீட்டிற்கு சென்றுள்ளனர்.
இந்த நிலையில் வெகு நேரமாகியும் தனுஷ் வீட்டிற்கு வராததால் சந்தேகம் அடைந்த தனுஷின் பெற்றோர் நண்பர்களிடம் விசாரித்தபோதுதான் நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளனர். இதைக் கேட்டு அதிர்ந்து போன தனுஷின் பெற்றோர் உடனடியாக காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அசோக் நகர் மற்றும் சைதாப்பேட்டை தீயணைப்பு துறையினர் உடனடியாக மீட்பு பணியில் களமிறங்கினர்.12 பேர் கொண்ட தீயணைப்புத் துறையினர் அடையாறு கூவம் நதியில் பைபர் போட் உதவியுடன் பாதாள கொலுசை வைத்து சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
நள்ளிரவு பன்னிரண்டு முப்பது மணி அளவில் அடையாறு கூவம் நதியில் இருந்து சிறுவனின் சடலத்தை கைப்பற்றிய தீயணைப்புத் துறையினர் சிறுவனின் உடலை சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.