தென் மாவட்டங்களில் 140 இன்ஸ்பெக்டர்கள் பணியிடமாற்றம்
நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தென் மாவட்டங்களில் 140 இன்ஸ்பெக்டர்களை பணியிட மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்லையொட்டி தென்மாவட்டங்களில் 140 காவல் ஆய்வாளர்கள் பணியிடமாற்றம் செய்து, தென்மண்டல ஐஜி நரேந்திரன் நாயர் உத்தரவிட்டுள்ளார்.
தேர்தலையொட்டி, ஒவ்வொரு மாவட்டத்திலும் காவல்துறை, வருவாய் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் பணியிடமாறுதல் செய்வது வழக்கம். இதன்படி, 2024 மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், காவல் துறையில் ஒரே இடத்தில் 3 ஆண்டுக்கு மேல், சொந்த மாவட்டங்கள் மற்றும் ஏற்கெனவே தேர்தல் ஆணையத்தால் எச்சரிக்கப்பட்ட அதிகாரிகள் என்ற தேர்தல் விதிமுறைகளை பின்பற்றி பணி மாறுதல் பட்டியல்கள் தயாரிக்கப்பட்டன. இதன்படி, தென்மாவட்ட அளவில் தயாரிக்கப்பட்ட பணி மாறுதல் குறித்த பட்டியல்களின் அடிப்படையில் முதல்கட்டமாக காவல் ஆய்வாளர்களுக்கான பணி மாறுதல் உத்தரவை தென் மண்டல ஐஜி நரேந்திர நாயர் பிறப்பித்துள்ளார்.
இந்தப் பட்டியலின்படி, மதுரை நகர், மதுரை சரகம் (மதுரை,விருதுநகர்), திண்டுக்கல் சரகம் (திண்டுக்கல், தேனி), ராமநாதபுரம் சரகம் (ராமநாதபுரம், சிவகங்கை) ஆகிய இடங்களில் இருந்து சட்டம், ஒழுங்கு, போக்கு வரத்து உள்ளிட்ட பிரிவுகளை சார்ந்த 80 காவல் ஆய்வாளர்களும், நெல்லை மாநகர், நெல்லை சரகம் மற்றும் மதுரை நகர், மதுரை சரகம், ராமநாதபுரம் சரகத்தில் இருந்து சுமார் 61 ஆய்வாளர்களும் முதல் கட்டமாக பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஒரே நேரத்தில் தென்மாவட்டத்தில் மட்டும் சுமார் 140-க்கும் மேற்பட்டோர் மாற்றப்பட்டுள்ளனர். இவர்கள் அந்தந்த சரக டிஐஜி அலுவலகங்கள் மூலம் காலிபணியிடங்களில் நியமிக்கப்படுவர். உரிய நேரத்தில் சம்பந்தப்பட் காவல் நிலையங்களில் பணி அமர்த்தப்படுவர் என தென்மண்டல காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.