வேகவதி ஆற்றில் 1,400 ஆக்கிரமிப்புகள்!
வேகவதி ஆற்று
காஞ்சிபுரம் நகரை ஒட்டி பாயும், வேகவதி ஆற்றில் உள்ள 1,400 ஆக்கிரமிப்புகள், 10 ஆண்டுகளாக அகற்றப்படாமல், இழுபறி நீடிக்கிறது. அரசியல் தலையீட்டால், ஆக்கிரமிப்பாளர்களை அகற்ற அதிகாரிகள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. குறிப்பாக, நீர்நிலை ஆக்கிரமிப்பு நிலங்கள், ஏக்கர் கணக்கில் இன்னும் அகற்றப்படாமலேயே உள்ளன. அதில் முதன்மையானதாக, காஞ்சிபுரம் வேகவதி ஆற்றில் உள்ள, 1,400க்கும் மேற்பட்ட வீடுகள் அப்படியே உள்ளன.
வேகவதி தாமல் கிராமம் அருகே, பாலாற்றின் கிளை ஆறாக துவங்கி, தாங்கி கிராமத்தில் மீண்டும் பாலாற்றில் இணைகிறது. இதன் நீளம், 26 கி.மீ., சில இடங்களில் அகலமாகவும், சில இடங்களில் குறுகியும் வேகவதி ஆறு காணப்படுகிறது. ஆக்கிரமிப்பு வீடுகள், ஆற்றுக்குள்ளேயே வீடுகள் கட்டியுள்ளதால், கால்வாய் போல காட்சிஅளிக்கிறது.
ஆக்கிரமிப்பாளர்களுக்கு, கீழ்கதிர்பூர் கிராமத்தில், 200 கோடி ரூபாய் மதிப்பில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கட்டப்பட்டிருக்கும் வீடுகள், 2019ல் திறந்த பின்னும், அவை அப்படியே உள்ளன. வேகவதி ஆக்கிரமிப்பாளர்கள் காலி செய்யாததால், ஐந்து ஆண்டுகளாக அந்த கட்டடம் வீணாகி வருகிறது.