394 மாணவர்களுக்கு ரூ.14.47 கோடி கல்விக்கடன்
கல்வி கடன் முகாம்
சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் கல்விக்கடன் வழங்கும் சிறப்பு முகாம் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். இதில், மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான கல்லூரி மாணவ, மாணவிகள் தங்களது பெற்றோர்களுடன் கலந்து கொண்டு கல்விக்கடன் தொடர்பாக சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளிடம் விவரம் கேட்டறிந்தனர்.
இந்த முகாமில் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி பேசியதாவது:- தமிழ்நாடு அரசின் ஆணைக்கிணங்க சேலம் மாவட்டத்தில் கல்விக்கடன் மேளா நடத்தப்பட்டு உள்ளது. இந்த கல்விக்கடன் வழங்கும் முகாமில் ஏற்கனவே கல்விக்கடன் வேண்டி வித்யாலட்சுமி மற்றும் ஜன்சமர்த் இணையதளங்களின் விண்ணப்பித்தவர்கள் மட்டுமல்லாமல், மேலும் புதிதாக கல்விக்கடன் பெற விரும்புபவர்களுக்கும் கல்விக்கடன் வழங்கவேண்டும் என்பதே இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும். ரூ.14.47 கோடி கல்விக்கடன் சேலம் மாவட்டத்தில் 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை 2,200 மாணவ, மாணவிகளுக்கு ரூ.70 கோடி மதிப்பில் கல்விக்கடன்கள் வழங்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து தற்போது நடைபெறும் கல்விக்கடன் வழங்கும் முகாமில் சேலம் மாவட்டத்தில் உள்ள 44 வங்கிகள் கலந்து கொண்டு மாணவ, மாணவிகள் அளித்த விண்ணப்பங்களை பரிசீலித்து தற்போது வரை 394 மாணவ, மாணவிகளுக்கு ரூ.14.47 கோடி மதிப்பில் கல்விக்கடன் வழங்கப்பட்டு உள்ளது. இவ்வாறு கலெக்டர் பேசினார்.