திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.1.46 கோடி பறிமுதல்
பறக்கும் படையினர் சோதனை
மக்களவை தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவதைத் தடுக்கும் வகையில், திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்தல் நிலையான கண்காணிப்பு குழு மற்றும் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், பூந்தமல்லி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட, பூந்தமல்லி- டிரங்க் சாலையில் நேற்று தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் அவ்வழியாக வந்த தனியார் ஏடிஎம் மைய வாகனம் ஒன்றை சோதனை செய்தனர். அச்சோதனையில், ரூ. 70 லட்சத்து 11 ஆயிரத்து 650 ரொக்கம் உரிய ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்டது.
தெரிந்தது. இதையடுத்து, அப்பணத்தை தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, அதே பகுதியில் வந்த மற்றொரு தனியார் ஏடிஎம் மைய வாகனத்திலும் உரிய ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.13 லட்சத்து 84 ஆயிரத்து 686 ரொக்கத்தை தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர். அதுமட்டுமல்லாமல், புதுசத்திரம், பூந்தமல்லி- திருவள்ளூர் சாலையில் நேற்று பூந்தமல்லி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர், வாகன சோதனையில் ஈடுபட்டனர். அச்சோதனையில், உரிய ஆவணங்களின்றி தனியார் ஏடிஎம் மைய வாகனத்தில் எடுத்து செல்லப்பட்ட ரூ.57 லட்சத்தை தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர்.
மேலும், திருநின்றவூர், வெள்ளியூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில், 2 பேர் உரிய ஆவணங்களின்றி தலா ரூ. 2.50 லட்சம், ரூ.5 லட்சம் ரொக்கப் பணத்தை எடுத்து சென்றது தெரியவந்தது. அந்த பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.