ரூ.15 லட்சம் கடனை தராமல் அண்ணன் தலைமறைவு: தம்பியை வெட்டிக் கொலை செய்த பாஜக நிர்வாகி கைது
பட்டுக்கோட்டை அருகே அண்ணன் 15 லட்சம் ரூபாய், கடன் வாங்கிக்கொண்டு தலை மறைவானதால், வெளிநாட்டில் இருந்து வந்த தம்பியை, வெட்டி படுகொலை செய்த, பா.ஜ.க நிர்வாகியை திங்கள்கிழமை காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே நடுவிக்கோட்டை கிராமத்தை சேர்ந்த சக்திவேல் (38), இவர் மேட்டுவயல் கிராமத்தை, பேராவூரணி பா.ஜ.க, வடக்கு ஒன்றிய தலைவரான ராஜேஷ்குமார் (37), என்பவரிடம் 15 லட்சம் ரூபாய் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சக்திவேல் கடனை திரும்பி தராமல், கடந்த ஒன்றரை ஆண்டுக்கு மேலாக, இழுத்தடித்து வந்தார். இதில் சக்திவேலுக்கும், ராஜேஷ்குமாருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை இரவு சக்திவேலிடம் பணத்தை கேட்க, ராஜேஷ்குமார் சென்ற போது, அவர் தனது தாயுடன் தலைமறைவாகியுள்ளது தெரியவந்தது. கடந்த 20 நாட்களுக்கு முன்பு, வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்த சக்திவேலின் கடைசி தம்பியான பிரகதீஸ்வரன் (29), மட்டுமே வீட்டில் இருந்துள்ளார். அப்போது, ராஜேஷ்குமார், பிரகதீஸ்வரனினிடம், உன் அண்ணன் சக்திவேல் பணம் 15 லட்சம் ரூபாய் பணத்தை வாங்கி ஏமாற்றி விட்டு, சென்றதாகவும் அந்த பணத்தை உடனடியாக திருப்பிக் கொடுக்க வேண்டுமென அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும், ராஜேஷ் குமார், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து பிரகதீஸ்வரனை வெட்ட முயன்றார். இதில் உயிர் பிழைக்க பிரகதீஸ்வரன் வீட்டிலிருந்து ஓடி உள்ளார். இருப்பினும், ராஜேஷ்குமார், பிரகதீஸ்வரனை ஓட ஓட விரட்டி, வெட்டி கொலை செய்து விட்டு, வாட்டாத்திகோட்டை காவல்நிலையத்தில் சரணடைந்தார். இது தொடர்பாக, காவல்துறையினர் ராஜேஷ் குமார், மீது வழக்கு பதிந்து கைது செய்தனர். இந்நிலையில், தம்பி வெட்டிக்கொலை செய்யப்பட்ட செய்தி கேட்டு, தலைமறைவாக இருந்த சக்திவேல் திங்கள்கிழமை ஊருக்கு திரும்பி வந்தார்.
Next Story



