15 பயனாளிகளுக்கு ரூ.04.95 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகள்

15 பயனாளிகளுக்கு  ரூ.04.95 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகள்
X
சிவகங்கை மாவட்டம், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் 15 பயனாளிகளுக்கு ரூ.04.95 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் வழங்கினார்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (23.12.2024) மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில் நடைபெற்றது. மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை, மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித் தொகை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள், புதிய மின்னணு குடும்ப அட்டை போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்களிடமிருந்து 407 மனுக்கள் பெறப்பட்டது. அம்மனுக்களில் தகுதியுடைய மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் தொழிலாளர் நலத்துறையின் சார்பில் தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா நலவாரியங்களின் கீழ் 08 பயனாளிகளுக்கு திருமண உதவித்தொகை, சாலை விபத்து மற்றும் இயற்கை மரண நிவாரணத்தொகை என மொத்தம் ரூ.4,50,000/- மதிப்பீட்டிலும், பால் வளத்துறையின் சார்பில் தரமான பால் உற்பத்தியை ஊக்குவித்திடும் பொருட்டு சிறந்த பால் உற்பத்தியாளர்கள், சங்க செயலாளர்கள் மற்றும் தொகுப்பு பால் குளிர்விப்பு மைய செயலாளர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்ற துறை ரீதியான அறிவிப்பின்படி, சிறந்த பால் உற்பத்தியாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட முறையூர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க உறுப்பினருக்கு முதல் பரிசாக ரூ.10,000/- மும், படமாத்தூர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க உறுப்பினருக்கு இரண்டாம் பரிசாக ரூ.5,000/-மும், சிறந்த பால் உற்பத்தியாளர் சங்க செயலர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட கூட்டுறவுப்பட்டி பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க உறுப்பினருக்கு முதல் பரிசாக ரூ.10,000/- மும், படமாத்தூர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க உறுப்பினருக்கு இரண்டாம் பரிசாக ரூ.5,000/-மும், அதேபோன்று சிறந்த தொகுப்பு பால் குளிர்விப்பு மைய செயலாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட கண்டாங்கிபட்டி தொகுப்பு மைய செயலாளருக்கு முதல் பரிசாக ரூ.10,000/-மும், பருத்தி கண்மாய் தொகுப்பு மைய செயலாளருக்கு இரண்டாம் பரிசாக ரூ.5,000/-மும் ஊக்கதொகையினையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் சிவகங்கை மாவட்ட கிறிஸ்துவ மகளிர் உதவும் சங்கம் -2யினை 2024-25 ஆம் ஆண்டில் துவங்குவதற்கு அரசாணை வரப்பெற்றுள்ளதை தொடர்ந்து சிவகங்கை மாவட்ட கிறிஸ்துவ மகளிர் உதவும் சங்கம் -2க்கான சான்று என மொத்தம் 15 பயனாளிகளுக்கு அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.4,95,000/- மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். முன்னதாக, நபார்டு வங்கியின் சார்பில் திருநங்கைகளின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு உதவிடும் பொருட்டு, நடமாடும் உணவு வாகனத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆஷா அஜித்,இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். நபார்டு வங்கியின் சார்பில், விவசாயம் மற்றும் கிராமப்புற வளர்ச்சிக்கென பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக மேற்கண்டவாறு, திருநங்கைகளின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு அடிப்படையாக தேவகோட்டை ரஸ்தா பகுதிகளில் வசித்து வரும் 30 திருநங்கைகளை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு உணவு தயாரிக்கும் பயிற்சியினை உமன் தொண்டு நிறுவனத்தின் மூலம் அளிக்கப்பட்டு, அதனைத்தொடர்ந்து, அத்தொழிலை முறையாக செய்து பயன்பெறும் வகையில், நபார்டு வங்கியின் சார்பில் நடமாடும் உணவு வாகனம் திருநங்கைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த உணவக வாகனமானது காரைக்குடி பகுதியில் செயல்பட திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறாக பயன்பெற்று வரும் திருநங்கைகளை எடுத்துக்காட்டாக கொண்டு மற்ற திருநங்கைகளும் சிறு தொழில் புரிந்து பயன்பெறும் வகையில், இவ்வுணவக வாகனமானது மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் இன்றையதினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வழங்கி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி, உதவி ஆணையர் (தொழிலாளர் நலத்துறை) சதீஷ்குமார், ஆவின் பொது மேலாளர் ராஜசேகர், மாவட்ட சமூக நல அலுவலர் ரதிதேவி, மாவட்ட நபார்டு வளர்ச்சி மேலாளர் அருண்குமார், உமன் தொண்டு நிறுவனத்தின் தலைவர் ஜோதிபாலன் உட்பட அரசின் பல்வேறு துறைகளைச் சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story