வெறி நாய் கடித்ததில் பெண்கள், சிறுவர்கள் உள்பட 15 பேர் காயம்
தேனி மாவட்டம் கடமலைக்குண்டு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக வெறிநாய் கடித்து சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு கடமலைக்குண்டு அருகே உள்ள ஆலந்தளிர் மற்றும் குமணன் தொழு கிராமத்தில் வெறி நாய் கடித்ததில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட 15 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்த அனைவரும் கடமலைக்குண்டு அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
மேலும் வெறி நாய் கடிக்கான ஊசிகளை தொடர்ந்து குறிப்பிட்ட நாட்களுக்குள் வந்து செலுத்திக் கொள்ளும்படி மருத்துவமனை சார்பில் அறிவுறுத்தப்பட்டது. கடமலைக்குண்டு பகுதியில் கடந்த சில வாரங்களாகவே வெறிநாய்கள் தாக்கும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருவதால் தெரு நாய்களை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்