150 தென்னை மரங்களை சேதப்படுத்தி சென்ற காட்டு யானைகள் கூட்டம் ... இரண்டு ஆண்டு உழைப்பு அனைத்தும் வீணாகி விட்டதாக விவசாயிகள் கண்ணீர்

யானை
தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே மலை அடிவாரத்தில் உள்ள மேலப்பட்டி பகுதியில் கடந்த சில மாதங்களாகவே காட்டு யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. கடந்த ஆறு மாதங்களில் மட்டும் 15 முறை காட்டு யானைகள் விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி சென்றுள்ளது. குறிப்பாக தென்னை மரங்களை அடியோடு சேதப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் மேலப்பட்டி கிராமத்தை சேர்ந்த செந்தில்நாதன் அன்னலட்சுமி தம்பதியினருக்கு சொந்தமான சுமார் இரண்டு ஏக்கர் தென்னை தோப்புக்குள் நேற்று இரவு புகுந்த காட்டு யானைகள் கூட்டம் 150கும் மேற்பட்ட தென்னை மரங்களை சேதப்படுத்தி சென்றுள்ளது. தென்னை மரங்களில் உள்ள குருத்துப் பகுதியை மட்டும் தோண்டி எடுத்து சேதப்படுத்திச் சென்றுள்ளதால், அந்த மரங்கள் அனைத்தும் மீண்டும் துளிர் விட முடியாத நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக கடந்த இரண்டு ஆண்டுகளாக வளர்க்கப்பட்ட மரம் குழை விட்டு காய்க்கும் நேரத்தில் மரங்கள் அனைத்தும் காட்டு யானைகளால் சேதப்படுத்தப்பட்டதால் விவசாயிகள் கண்ணீர் விட்டு அழுத காட்சி காண்போரை கண்கலங்க செய்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடவு செய்யப்பட்ட தென்னை மரங்கள் காய்க்கும் சமயத்தில் காட்டு யானைகளால் சேதம் அடைந்துள்ளதால் பெரிய அளவிலான நஷ்டத்தை சந்தித்துள்ளதாகவும், நஷ்டத்தை ஈடு செய்யும் விதமாக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story