150 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் பால் பவுடர் மற்றும் பால் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை

X
பெரம்பலூர் மாவட்டம் பாடாலூரில் ரூ.150 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் பால் பவுடர் மற்றும் பால் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத்துறை ஆணையர் அ.அண்ணாதுரைஆய்வு பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் திருவிளக்குறிச்சியில் ரூ.150 கோடி மதிப்பீட்டில் 60 மெட்ரிக் டன் பால் பவுடர் மற்றும் பால் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையின் கட்டுமான பணிகளின் முன்னேற்ற நிலை குறித்து பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத்துறை ஆணையர் அ.அண்ணாதுரைமாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ் தலைமையில் இன்று (18.07.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வு செய்த பின் பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத்துறை ஆணையர் தெரிவித்ததாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி, பெரம்பலூர் மாவட்டம் பாடாலூரில் நாளொன்றுக்கு 6 லட்சம் லிட்டர் பால் கையாளும் வகையில் பால் பொருட்கள் தயாரிக்கும் ஆலை ரூ.150 மதிப்பீட்டில் நிறுவப்படும் என 13.04.2022 அன்று நடைபெற்ற பால்வளம் தொடர்பான மானிய கோரிக்கையில் மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தொழிற்சாலை அமைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் ஊரக உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கடன் உதவியுடன் தொழிற்சாலை நிறுவுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பால் பவுடர் மற்றும் பால் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையின் கட்டுமான பணியானது 18.10.2023 அன்று துவங்கப்பட்டு தொழிற்சாலையின் மொத்த பரப்பான 8,000 சதுர மீட்டரில் தற்சமயம் 2,800 சதுர மீட்டர் பரப்பிற்கு கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இந்த தொழிற்சாலையானது 7 தளங்களுடன் 43 மீட்டர் உயரத்தில் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் ரூ.26.53 கோடி மதிப்பீட்டில் தற்போது நடைபெற்று வருகின்றது. ரூ.121 கோடி மதிப்பீட்டில் இயந்திரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.இந்த பணிகளின் முன்னேற்ற நிலை தொடர்பாகவும் இயந்திரங்கள் கொள்முதல் பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுடன் நேரில் ஆய்வு செய்யப்பட்டது. மேலும் பணிகளின் தற்போது நிலை குறித்து கேட்டு அறிந்து பணிகளை விரைந்து மேற்கொண்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தலுக்கிணங்க குறித்த காலத்திற்குள் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் குறிப்பாக வரும் டிசம்பர் காலத்திற்குள் அனைத்து பணிகளும் முடித்திட வேண்டும் பணிகள் அனைத்தும் தரமாகவும் திட்ட மதிப்பீட்டில் உள்ளவாறு மேற்கொள்ள வேண்டும் இதன் தொடர்பான விவரங்களை ஒவ்வொரு வாரமும் அறிக்கையாக வாரந்தோறும் ஆணையர் அலுவலகத்துக்கு தெரியப்படுத்த வேண்டும் என ஆவின் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் பால் கொள்முதல் எந்தெந்த மாவட்டங்களில் இருந்து எவ்வளவு லிட்டர் கொள்முதல் செய்யப்பட உள்ளது உபரி பால் மூலமாக தயாரிக்கப்படும் பால் பொருட்கள் குறித்தும் அதன் தயாரிப்பு செயல்முறை குறித்து விரிவாக கேட்டறியபட்டது இந்த ஆலைக்கு வரும் சாலை வழிகள் இணைப்பு சாலைகளை விரைந்து மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது. பால் உற்பத்தியாளர்கள் நலனை கருத்தில் கொண்டு உபரி பாலில் இருந்து பெரம்பலூர் மாவட்டம் பாடாலூரில் முழுசத்து பால் பவுடர், கொழுப்பு சத்து நீக்கப்பட்ட பால் பவுடர், டெய்ரி ஒயிட்னர் மற்றும் வெண்ணெய் தயாரிக்கும் வசதிகளுடன் தமிழகத்தில் மிகப்பெரிய பால் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையாக அமைய உள்ள இந்த ஆலையின் மூலமாக பெரம்பலூர் மாவட்டம் உட்பட 11 மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் பயன்பெற உள்ளனர் என பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத்துறை ஆணையர் அவர்கள் தெரிவித்தார். இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர்/ ஆவின் பொது மேலாளர், திருச்சி திருமதி.எஸ்.முத்துமாரி, பெரம்பலூர் துணைப்பதிவாளர் பால்வளம் ரெ.நாராயணசாமி, திருச்சி துணைப்பதிவாளர்கள் பால்வளம் நாகராஜ் சிவக்குமார், ஆலத்தூர் வட்டாட்சியர் முத்துக்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Next Story

