பட்டா வழங்க ரூ.15,000 லஞ்சம் வி.ஏ.ஓ., டிரைவர் கைது
கைது
பட்டா வழங்க ரூ.15,000 லஞ்சம் வி.ஏ.ஓ., டிரைவர் கைது. போலீசார் நடவடிக்கை.
சேலம் மாவட்டம் கம்மாளப்பட்டி அருகே ஜல்லுாத்துப்பட்டியை சேர்ந்த குமாரின் மகன்கள் அஜித்குமார், அரவிந்த், 22. இவர்களுக்கு அவரது தாத்தா செல்லமுத்து தானசெட்டில்மென்டாக, ஒரு ஏக்கர் விவசாய நிலத்தை வழங்கினார். அந்த நிலத்துக்கு பட்டா பெற, தும்பல்பட்டி வி.ஏ.ஓ., வான, சேலம், 4 ரோடு, பெரமனுாரை சேர்ந்த பாலம்மாள், 47, என்பவரிடம் விண்ணப்பித்தனர். இதற்கு நேற்று முன்தினம், வி.ஏ.ஓ., 20,000 ரூபாய் லஞ்சம் கேட்டார். அவ்வளவு தொகை இல்லை என அரவிந்த் கூறியுள்ளார். இதனால் வி.ஏ.ஓ., பேரம் பேசி,15,000 ரூபாய் வழங்கும்படி கூறியுள்ளார். மேலும் அந்த பணத்தை, அவரது கார் டிரைவரான, மணியனுாரை சேர்ந்த காமராஜ், 50, என்பவரிடம் வழங்கும்படி தெரிவித்தார். இதையடுத்து அரவிந்த், சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் அறிவுரைப்படி அரவிந்த், நேற்று மதியம், 2:00 மணிக்கு, ரசாயனம் தடவிய, 15,000 ரூபாயை, வி.ஏ.ஓ., அறிவுறுத்தல்படி, காமராஜிடம் வழங்கினார். அவர், பணத்தை காரில் கொண்டு போய் வைத்தார். அப்போது மறைந்திருந்த, இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையிலான போலீசார், பணத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து பாலம்மாள், காமராஜ் ஆகியோரை கைது செய்தனர். பின் சேலம் லஞ்ச ஒழிப்பு நீதிபதி முன் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் டிரைவரையும், பெண்கள் கிளை சிறையில், வி.ஏ.ஓ.,வையும் அடைத்தனர்.
Next Story