மர்ம விலங்கு கடித்து 16 ஆடுகள் உயிரிழப்பு

மர்ம விலங்கு கடித்து 16 ஆடுகள் உயிரிழப்பு

வனத்துறையினர் ஆய்வு 

ஆத்தூா் பகுதியில் 16 ஆடுகள் மா்மமாக உயிரிழந்துள்ள நிலையில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதா என வனத்துறையினா் ஆய்வு நடத்தி வருகின்றனா்.

தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூா் புளியடிதெருவில் கடந்த 24ஆம் தேதி 4 ஆடுகள் கழுத்தில் கடிபட்ட காயத்துடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தன. மேலாத்தூா் ஜே.ஜே.நகா் பகுதியில் கடந்த 25ஆம் தேதி 3 ஆடுகளும், 26ஆம் தேதி 9 ஆடுகளும் கடிபட்ட ரத்த காயங்களுடன் மா்மமான முறையில் இறந்து கிடந்தது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் திருச்செந்தூா் வனச்சரக அலுவலா் கனிமொழி அரசு தலைமையில் வனத்துறையினா் அந்தப் பகுதிக்கு நேற்று வந்து ஆய்வு நடத்தினா்.

இறந்து கிடந்த ஆடுகளின் காயங்களையும், அந்தப் பகுதியில் பதிவாகியிருந்த மிருகங்களின் காலடித்தடங்களையும் வனத் துறையினா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். இதுகுறித்து வனச்சரக அலுவலா் கனிமொழி அரசு தெரிவிக்கையில், தகவலறிந்ததும் 3 வனவா்கள் இந்தப் பகுதியில் ரோந்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேவை ஏற்பட்டால் 20 வனவா்கள் இங்கு ரோந்து பணியில் ஈடுபடுவாா்கள். இந்தப் பகுதியில் மூன்று இடங்களில் கேமரா பொருத்தப்பட்டு வனவிலங்குகளின் நடமாட்டம் குறித்து கண்காணிக்கப்படும். சிறுத்தை இருப்பது உறுதி செய்யப்பட்டால் கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதியில் கொண்டு விடப்படும்.

தற்போது இந்தப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக சந்தேகம் இருப்பதால் பொதுமக்கள் மாலை 6 மணிக்கு மேல் வெளியே செல்ல வேண்டாம். கால்நடைகளையும் வெளியில் விடாமல் வீட்டில் கட்டி வைக்க வேண்டும் என்றாா். இதற்கிடையில், வனத்துறையின் அதிரடிப்படை குழுவினா் சம்பவ இடத்துக்கு நேற்று வந்து ஆய்வு நடத்தினா்.

Tags

Next Story