தஞ்சாவூர் மாவட்டத்தில் 17 ஆயிரம் மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கல்
உரிமை தொகை
தஞ்சாவூர் பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கில் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ், மகளிருக்கு உரிமை தொகைக்கான வங்கி பற்று அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமை வகித்தார். மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.கல்யாணசுந்தரம், மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் செ.ராமலிங்கம், சட்டமன்ற உறுப்பினர்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், கா.அண்ணாதுரை, மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில், மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கிடும் மகளிர் உரிமைத் திட்டத்தில், கள ஆய்வு நிலுவையில் இருந்த விண்ணப்பங்கள் இறுதி செய்யப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய பயனாளிகளான 7.35 லட்சம் மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கிடும் விதமாக மகளிருக்கு வங்கி பற்று அட்டைகளை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, தஞ்சாவூர் மாவட்டத்திலும் மகளிருக்கு வங்கி பற்று அட்டைகளை வழங்கப்பட்டது. அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கார்டுகளின் எண்ணிக்கை 7.11 லட்சம் ஆகும். அதில் முகாம்கள் மூலம் முதற்கட்டமாக 3 லட்சம் விண்ணப்பங்களும், இரண்டாம் கட்டமாக 2.23 லட்சம் விண்ணப்பங்களும் சிறப்பு முகாம்களில் 27ஆயிரம் விண்ணப்பங்களும் என கூடுதலாக 5.55 லட்சம் விண்ணப்பங்கள் 83 சதவீதம் பெறப்பட்டது. இதில் 3.98 லட்சம் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
தற்போது தஞ்சாவூர் மாவட்டத்தில் கூடுதலாக 17 ஆயிரம் பேருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் நிராகரிப்பு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் மேல்முறையீட்டு மனுவினை பரீசிலனை செய்வதற்காக வருவாய் கோட்ட அலுவலர்களின் தலைமையில் குழு ஏற்படுத்தப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் தெ.தியாகராஜன், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் ஆர்.உஷா புண்ணியமூர்த்தி, மாநகராட்சி துணை மேயர்கள் அஞ்சுகம் பூபதி, சு.ப.தமிழழகன், தஞ்சாவூர் கோட்டாட்சியர் எஸ்.இலக்கியா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.