175 பயனாளிகளுக்கு ரூ.44.64 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்

175 பயனாளிகளுக்கு ரூ.44.64 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 175 பயனாளிகளுக்கு ரூ.44.64 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் வழங்கி, பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று, கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை, மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித் தொகை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள், புதிய மின்னணு குடும்ப அட்டை போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்களிடமிருந்து 380 மனுக்கள் பெறப்பட்டது. அம்மனுக்களில் தகுதியுடைய மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் அறிவுறுத்தினார். மேலும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 31 பயனாளிகளுக்கு தலா ரூ.6,000/- வீதம் மொத்தம் ரூ.1,86,000/- மதிப்பீட்டிலான விலையில்லா தையல் இயந்திரங்களையும், 01 பயனாளிக்கு ரூ.5,000/- மதிப்பீட்டிலான பித்தளை தேய்ப்புப் பெட்டியினையும், மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கத்தின் சார்பில் 38 பயனாளிகளுக்கு தலா ரூ.10,000/- வீதம் ரூ.3,80,000/- மதிப்பீட்டிலான கல்வி உதவித்தொகைக்கான காசோலைகளையும், 34 பயனாளிகளுக்கு தலா ரூ.12,000/- வீதம் ரூ.4,08,000/- மதிப்பீட்டிலான விதவை உதவித்தொகை்கான காசோலைகளையும், 14 பயனாளிகளுக்கு ரூ.1,60,000/- மதிப்பீட்டிலான சிறு வியாபாரத்திற்கான கடனுதவிக்கான காசோலைகளையும், மாவட்ட கிறித்துவ மகளிர் உதவும் சங்கத்தின் சார்பில் 33 பயனாளிகளுக்கு ரூ.4,95,000/-மதிப்பீட்டிலான ஆடு,மாடு மற்றும் கோழி வளர்ப்பு ஆகியவைகளுக்கான உதவித்தொகைக்கான காசோலைகளையும், 22 பயனாளிகளுக்கு ரூ.3,30,000/- மதிப்பீட்டிலான சிறு வியாபாரத்திற்கான கடனுதவிக்கான காசோலைகளையும், கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தமைக்காக 01 பயனாளிக்கு கூட்டுறவுத்துறையின் சார்பில், முதலமைச்சர் பொது நிவாரண நிதியின் கீழ் ரூ.25,00,000/- மதிப்பீட்டிலான காசோலையினையும், மேலும் 01 பயனாளிக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணையினையும் என ஆக மொத்தம் 175 பயனாளிகளுக்கு ரூ.44,64,000/- மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் வழங்கினார். அதனைத்தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் கடந்த வாரம் காணொளி காட்சி (OFFLINE) வாயிலாக, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகத்தின் சார்பில், கீழநெட்டூர் மற்றும் தமறாக்கி வடக்கு (கொத்தங்குளம்) ஆகிய கிராமங்களில் திறந்து வைக்கப்பட்டுள்ள சமுதாயக் கூடங்களை, அந்தந்த கிராமங்களில் இயங்கி வரும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் பராமரிப்பதற்கு ஏதுவாக, கீழநெட்டூரிலுள்ள முல்லை மகளிர் சுய உதவிக்குழு மற்றும் தமறாக்கியிலுள்ள (கொத்தங்குளம்) பிடாரி அம்மன் மகளிர் சுய உதவிக்குழு மற்றும் இந்திராகாந்தி மகளிர் சுய உதவிக்குழு ஆகிய மகளிர் சுய உதவிக்குழுக்களுக்குச் சார்ந்த உறுப்பினர்களிடம் சமுதாயக் கூடத்திற்கான சாவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இக்கூட்டத்தில், அரசின் பல்வேறு துறைகளைச் சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story