17 ஆம் நூற்றாண்டு நில தானக்கல் கண்டெடுப்பு

17 ஆம் நூற்றாண்டு நில தானக்கல் கண்டெடுப்பு

நில தான கல் 

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே குறுமனேந்தலில் 17 ம் நுாற்றாண்டு சேதுபதி மன்னர் கால நில தானக்கல்லை வரலாற்று ஆய்வாளர் கண்டறிந்துள்ளனர்.

குறுமனேந்தல் கிராமத்தில் நில தானக்கல் இருப்பதை வரலாற்று ஆய்வாளர் பாலசுப்பிரமணியன், ஆர்வலர் ரமேஷ் ஆகியோர் கண்டறிந்து ஆய்வு செய்தனர். அவர்கள் கூறியதாவது: அங்கு சூலம் அடையாளத்துடன் நில தானக்கல் இருப்பதை உறுதி செய்யப்பட்டது. இக்கல் 17 ம் நுாற்றாண்டை சேர்ந்தது. இக்கிராமத்திற்கு அருகில் உள்ள சிவன் கோயிலுக்கு நில தானங்கள் வழங்கப்பட்டதின் அடையாளமாக இது நடப்பட்டுள்ளது.

கல்வெட்டு வாசகம்13 வரிகளை கொண்ட இக்கல்வெட்டில் ஆனந்த வருடம் பங்குனி (மாதம்) பகல் திருமலை சேதுபதிக்கு புண்ணியமாக சந்தி(ர)ன் சேரும் கோமன் என்று பொறிக்கப்பட்டுள்ளது. சில எழுத்துக்கள் சிதிலமடைந்துள்ளன. ராமநாதபுரத்தை ஆட்சி செய்த திருமலை சேதுபதி மன்னரால் சிவன் கோயில்களுக்கு நில தானம் வழங்கி இருக்கலாம் என்று தெரிகிறது. சூலம் பொறித்த கல்வெட்டில் சூலம் சிவனுக்கு உரிய அடையாளமாகும்.

சேதுபதி மன்னர் ஆட்சிக் காலத்தில் கோயில் திருப்பணி, பராமரிப்பு, மக்கள் நலனுக்காக அதிக நிலங்களை தானமாக வழங்கிய நிகழ்வும் உண்டு. இப்பகுதியில் கிடைத்த தானக்கல் கல்வெட்டு மூலம் இவர்கள் ஆட்சியில் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டம் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்துள்ளது. இப்பகுதியில் கோயில் வளர்ச்சிக்கு சேதுபதி மன்னர்கள் செய்த கொடைகள் அனைத்தும் கல்வெட்டு மூலம் அடையாளத்துடன் வைப்பது வழக்கம்.

இத்தானக்கல்வெட்டு மூலம் மன்னர்கள் வரலாற்றின் சிறப்புகளை அறியலாம். இதுபோன்று காளையார்கோவில் பகுதியில் பல நுாற்றாண்டுகளை தாங்கி நிற்கும் கல்வெட்டுக்களும், முதுமக்கள் தாழிகளும் இருப்பதால், இவற்றை சிவகங்கையின் மற்றொரு கீழடியாக கருதலாம் என்கின்றனர்.

Tags

Next Story