யூ18 கூடைப்பந்து போட்டியில் தமிழக அணி வெற்றி!

யூ18 கூடைப்பந்து போட்டியில் தமிழக அணி வெற்றி: தூத்துக்குடி மாணவ, மாணவிகள் அசத்தல்
தேசிய ஜூனியர் (யூ18) கூடைப்பந்து போட்டியில் தமிழக அணி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தது. தமிழக அணியில் தூத்துக்குடி பள்ளி, மாணவ மாணவிகள் பங்கேற்று அசத்தினர். பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் நடைபெற்ற‌ 75வது தேசிய ஜூனியர் (யு18) கூடைப்பந்து போட்டியில் பல்வேறு அணிகள் மோதிக் கொண்டனர். இதில் தமிழ்நாடு அணி‌ தனது சிறப்பான விளையாட்டால்‌ இறுதிச் சுற்றை எட்டியது. இறுதிச் சுற்றில் ஆடவர் அணி பஞ்சாபையும், மகளிர் அணி குஜராத்தையும் அதிரடி ஆட்டத்தின் வாயிலாக வென்று தங்கப்பதக்கம் பெற்று இரட்டை சாம்பியன் எனும் தேசிய அளவிலான சாதனையையும் படைத்துள்ளது. சாம்பியன் பட்டம் வென்ற தமிழக ஆடவர் மற்றும் மகளிர் அணியினருக்கு வாழாத்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. தமிழக அணியின் ஆடவர் பிரிவில் தூத்துக்குடி‌ கிரசன்ட் பள்ளி மாணவன் முகமத் ஹாரிப் மற்றும் மகளிர் பிரிவில் தூத்துக்குடி ஹோலிகிராஸ் ஆங்கிலப் பள்ளி மாணவிகள் நூருல் சஜிதா, ஜெப்ரின் ஆகியோரும் சிறப்பாக விளையாடி தூத்துக்குடி மாவட்டத்திற்கும், இவர்கள் சார்ந்த பள்ளிக்கும் பெருமை சேர்த்துள்ளார்கள். மேலும் தமிழ்நாடு அணியின் வெற்றிக்கு பெரிதும் உறுதுணையாக இருந்து செயல்பட்ட தமிழ்நாடு கூடைப்பந்து அணியின் பயிற்சியாளர் தூத்துக்குடி பிரதீப்பின் முயற்சியை கூடைப்பந்து ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். நடைபெறும் அனைத்து விளையாட்டு போட்டிகளிலும் தூத்துக்குடி மாவட்டம் வெற்றி பட்டியலில் தொடர்ந்து முதன்மை பெற்று வருவதால் பயிற்சியாளர்களின் முயற்சி வரவேற்பை பெற்று வருகிறது.
Next Story