திருச்சி மாவட்டத்தில் 18 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி

தமிழகத்தில ஆங்காங்கே காய்ச்சல் அதிகரித்து வரும்நிலையில், திருச்சி மாவட்டத்தில் 18 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ள்து.

தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே, தொடர்ந்து மழை பெய்கிறது. இதனால், பல்வேறு மாவட்டங்களில் காய்ச்சல் அதிகரித்து வருவதாகவும், அவற்றை தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

கோவை மாவட்டத்தில் ஃப்ளூ காய்ச்சல் பரவலாக உள்ளது. திருச்சி மாவட்டத்தை பொருத்த வரை லேசான முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் கொசு உற்பத்தி தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், பலமுறை புகார் தெரிவித்தும் மாநகராட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். அதேவேளையில் தினமும் 50க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் குழந்தைகள், முதியவர்கள் உட்பட 18 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். கொசு ஒழிப்பு நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளின் அருகே கொசு மருந்தும் அடிக்கப்படுகிறது.

ஆனால் பல்வேறு இடங்களில் குப்பைகள் அள்ளப்படாமலும், தண்ணீர் தேங்கி இருப்பதாலும் கொசு உற்பத்தி அதிகரித்து வருகிறது; மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சியும் கண்டுகொள்ளாமல் பாதிப்பு ஏற்பட்டால் மட்டுமே நடவடிக்கை மேற்கொள்வதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Tags

Next Story