உத்திரமேரூரில் ரூ.1.80 கோடியில் சார்பதிவாளர் அலுவலக கட்டட பணி
சார்பதிவாளர் அலுவலக கட்டட பணி தொடங்கியது.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பேரூராட்சியில் உள்ள சார் - பதிவாளர் அலுவலகத்தில் பதிவாளர் உட்பட 15க்கும் மேற்பட்டோர் பணியாற்று கின்றனர். உத்திரமேரூர் நகர் பகுதி மட்டுமின்றி, உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 100க்கும் மேற்பட்ட கிராமத்தினர்,
நிலம், வீடு, வீட்டுமனை போன்றவற்றை வாங்க, விற்க, பத்திரப்பதிவு செய்யவும், சொத்துக்கு வில்லங்க சான்று பெறுதல், திருமணங்களை பதிவு செய்தல் போன்ற பல்வேறு தேவைகளுக்கு தினமும் இங்கு வந்து செல்கின்றனர். மக்களின் முக்கிய ஆவணங்களை இந்த அலுவலகத்தில் பதிவு செய்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இந்த அலுவலகத்திற்கான கட்டடம், பல ஆண்டுகளாக சிதிலமடைந்து இருந்ததையடுத்து, இக்கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்திவிட்டு போதுமான இட வசதியுடன் புதிய கட்டடம் கட்ட தீர்மானிக்கப்பட்டது. அதை தொடர்ந்து, உத்திரமேரூர் வாடகை கட்டடத்தில் தற்போது அலுவலகம் செயல்படுத்தப்படுகிறது.
இந்நிலையில்,உத்திரமேரூர் சார் - பதிவாளர் அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்ட பொதுப்பணித்துறை சார்பில், 1.80 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து பழைய கட்டடம் இடித்து அப்புறப்படுத்திவிட்டு, அதே இடத்தில் புதிய கட்டடத்திற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.