வறட்சி பாதித்த 45 கிராம விவசாயிகளுக்கு ரூ.18.28 கோடி இழப்பீடு

வறட்சி பாதித்த 45 கிராம விவசாயிகளுக்கு ரூ.18.28 கோடி இழப்பீடு

ஆட்சியர் தீபக் ஜேக்கப் 

தஞ்சாவூர் மாவட்டத்தில் போதிய மழையில்லாததாலும், பாசன நீர் கிடைக்காததாலும் 75 விழுக்காடு சாகுபடி பரப்பளவு குறைந்த 45 கிராமங்கள் கண்டறியப்பட்டு, அந்த கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு நிறுவனங்கள் மூலம் ரூ.18.28 கோடி இழப்பீடு விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் கூறியதாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பாண்டு சம்பா, தாளடி பருவத்தில் 2.93 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டு, இதுவரை 14,345 ஏக்கரில் அறுவடை நடைபெற்றுள்ளது. இதில் 2.83 லட்சம் ஏக்கரில் பயிர் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜன.7 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை பெய்த பருவம் தவறிய மழையினால் 33 சதவீதத்துக்கும் மேல் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க கணக்கெடுப்பு நடந்து வருகிறது.

மேலும் போதிய மழையின்மையால் தண்ணீர் இல்லாத காரணத்தால் விதைப்பு செய்ய இயலாமை, விதைப்பு பொய்த்து போகுதல் போன்ற காரணங்களினால் தஞ்சாவூர், பூதலூர், திருவையாறு ஆகிய வட்டாரங்களில் 75 விழுக்காடு சாகுபடி குறைந்த 45 கிராமங்கள் கண்டறியப்பட்டு, உரிய இழப்பீடு வழங்க மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழு மூலம் அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. இதையடுத்து தஞ்சாவூர் மாவட்டத்துக்கு இப்கோ டோக்கியோ பொது காப்பீடு நிறுவனத்தின் மூலம் 6,351 விவசாயிகளுக்கு ரூ.3.69 கோடியும், பியூச்சர் ஜெனராளி இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மூலம் முதல் தவணையாக 31,504 விவசாயிகளுக்கு ரூ.14.59 கோடி என ஆக மொத்தம் ரூ.18.28 கோடி இழப்பீடு தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

இந்த இழப்பீடு என்பது வேளாண்மைத்துறை, வருவாய்த்துறை, புள்ளியியல் துறை ஆகியவை இணைந்து, விவசாயம் செய்யாத வருவாய் கிராமங்களின் அடிப்படையில் கணக்கெடுப்பு நடத்தி, அதில் காப்பீடு செய்த விவசாயிகளின் வங்கி கணக்குக்கு அனுப்பப்பட்டு வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் விவசாயிகள் விளைவித்த நெல்லை கொள்முதல் செய்ய ஏதுவாக கடந்த ஜன.3 ஆம் தேதி முதல் இதுவரை 219 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 17 விழுக்காடு வரை ஈரப்பதம் தளர்வு செய்யப்பட்டு, இதுவரை 947 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு 207 விவசாயிகளுக்கு ரூ.2 கோடி வரை பணம் வங்கி கணக்கு மூலம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது" என்றார்.

Tags

Next Story