19 ஆண்டுகளுக்குப் பின் திரையிடப்பட்ட சச்சின் !
நடிகர் விஜய் நடித்து 19 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் சச்சின் கோவை புறநகர் பகுதியான கருமத்தம்பட்டியில் உள்ள திரையரங்கில் நேற்று மீண்டும் திரையிடப்பட்டது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தங்களது அபிமான நடிகரின் திரைப்படம் திரையிடப்பட்டதை விஜய் ரசிகர்கள் மற்றும் தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள் உற்சாகமாகக் கொண்டாடினர். திரையரங்கு முன்பு திரண்ட ரசிகர்கள் கேக் வெட்டி ஒருவருக்கொருவர் இனிப்புகள் வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, தளபதி மக்கள் இயக்கம் சார்பில் அப்பகுதியில் உள்ள முன் களப் பணியாளர்கள் மற்றும் பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மக்கள் இயக்க பாபு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஏராளமான விஜய் ரசிகர்கள் மற்றும் த.வெ.க தொண்டர்கள் கலந்து கொண்டனர். 19 ஆண்டுகளுக்குப் பிறகும் சச்சின் திரைப்படத்திற்கு இருக்கும் வரவேற்பு நடிகர் விஜய் மீதான ரசிகர்களின் நீங்கா அன்பையும், அவரது திரைப்படங்களின் காலத்தால் அழியாத தன்மையையும் காட்டுவதாக ரசிகர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். குறிப்பாக, குழந்தையாக இருந்தபோது பார்த்த திரைப்படம் ஒன்றை தற்போது தனது குழந்தையோடு பார்ப்பது மிகுந்த உற்சாகத்தை அளிப்பதாக பல விஜய் ரசிகைகள் பேட்டி அளித்தனர். இந்த கொண்டாட்ட நிகழ்வு அப்பகுதியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
Next Story



