ரூ.2 லட்சம் ஓஜி கஞ்சா பறிமுதல்: இருவர் கைது

X
வெளிநாட்டிலிருந்து ஓஜி கஞ்சா கடத்தி வந்து ஐடி ஊழியர்களுக்கு சப்ளை செய்த இருவரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள ஓஜி கஞ்சாவை பறிமுதல் செய்தனர். சூளைமேடு, அரும்பாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில் உயர் ரக கஞ்சா விற்கப்படுவதாக, அரும்பாக்கம் காவல் உதவி ஆணையர் ரமேஷுக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில், சூளைமேடு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சக்திவேலாயுதம் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் மேற்கண்ட பகுதிகளில் ரகசியமாக கண்காணித்து வந்தனர். அப்போது, சூளைமேடு பகுதியில் ஓஜி கஞ்சா விற்ற, கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்த கோகுல்(26) என்பவரை பிடித்து விசாரித்தனர். அதில், இவர் மீது ஏற்கனவே அரும்பாக்கம், தி.நகர், கோடம்பாக்கம், வடபழனி ஆகிய காவல் நிலையங்களில் கஞ்சா, வழிப்பறி, திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதும், இவரது கூட்டாளி தி.நகரை சேர்ந்த ஆகாஷ்(24) என்பருடன் சேர்ந்து கஞ்சா விற்றதும் தெரிய வந்தது. இவர்கள் விலை உயர்ந்த ஓ.ஜி கஞ்சாவை வெளிநாட்டிலிருந்து வாங்கிவந்து ஐடி ஊழியர்கள் மற்றும் நண்பர்களுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இவர்களிடம் இருந்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள ஒரு கிலோ 180 கிராம் ஓஜி கஞ்சா மற்றும் 2 செல்போன்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
Next Story

