2 நாட்களுக்குப் பின் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற

வலையில் போதிய மீன் சிக்காததால் மீனவர்கள் வேதனை
நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில், கடந்த 2 நாட்களாக மழை, கடல் பகுதியில் பலத்த காற்று காரணமாக, மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால், வேதாரண்யம் தாலுகாவை சேர்ந்த ஆறுகாட்டுதுறை, கோடியக்கரை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில், 5 ஆயிரம் மீனவர்கள் தங்களது பைபர் படகுகளை கடற்கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி விட்டு, மீன் பிடிக்க செல்லாமல் வீட்டில் ஒய்வில் இருந்தனர். மழை நின்று வெயில் அடிக்க துவங்கியதால், நேற்று முதல் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். அதிகளவில் மீன் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மகிழ்ச்சியுடன் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். ஆனால், மீனவர்கள் வலையில் குறைந்தளவே மீன்கள் கிடைத்தன. கோடிக்கரையிலிருந்து 50-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் சென்ற மீனவர்களுக்கு, 200 கிலோ காலா மீன் மட்டுமே கிடைத்தன. ஒரு சில படகுகளில் திருக்கை, கணவாய் மீன், நண்டு, சிங்கி இறால் உள்ளிட்ட மீன் வகைகள் கிடைத்தன. மீன் பிடிக்க சென்று திரும்பிய படகுகளுக்கு, ஆள் கூலி கூட கட்டுப்படி ஆகவில்லை என மீனவர்கள் கவலை தெரிவித்தனர்.
Next Story