2- ஆவது “திருக்குறள் மாணவர் மாநாடு-2025" 31.01.2025 மற்றும் 01.02.2025 ஆகிய 2 தினங்கள் நடைபெறவுள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தகவல்

X
விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கத்தில், தமிழ்நாடு முழுவதிலிருந்தும் தமிழ்மொழி இலக்கியத் திறனறித் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் பங்குபெறும் மாநில அளவிலான 2- ஆவது திருக்குறள் மாணவர் மாநாடு - 2025- ஐ மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம்தென்னரசு அவர்கள் மற்றும் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் ஆகியோர் தொடங்கி வைக்கவுள்ளனர். அறநெறிகளை பற்றிய உலகின் மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றாக கருதப்படும் திருக்குறளின்; தொன்மை மற்றும் மாண்பினை பறைசாற்றும் விதமாக "தீராக் காதல் திருக்குறள்" திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கிடையே திருக்குறளின் அடிப்படையில் வாழ்வியல் கோட்பாடுகளை அடித்தளமாக அமைத்து, அவர்களின் எதிர்காலத்தையும், சமுதாயத்தையும் செழுமைப்படுத்தும் முயற்சியாக, தமிழ்த் திறனறிவுத் தேர்வு-2024-ல் வெற்றி பெற்ற தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களையும் அழைத்து 31.01.2025 மற்றும் 01.02.2025 ஆகிய தேதிகளில் “திருக்குறள் மாணவர் மாநாடு 2025" என்ற நிகழ்வு, மாவட்ட நிர்வாகத்தால், விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் நடத்தப்படவுள்ளது. இம்மாநாட்டில் அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ்த் திறனறித் தேர்வு- 2024- ல் வெற்றி பெற்ற மாணவர்களில், சிறந்த மற்றும் ஆர்வமுள்ள மாணாக்கர்கள் தேர்வு செய்து சுமார் 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இம்மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர். மேலும், இம்மாநாட்டில் நடைபெற உள்ள சிறப்பு நிகழ்ச்சிகளில், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக இணை இயக்குநர் டாக்டர் சங்கர சரவணன் அவர்கள் குறள் வினாடி வினா போட்டியினையும், திரைப்பட இசையமைப்பாளர் திரு.ஜேம்ஸ் வசந்தன் அவர்கள் சங்கத்தமிழும் திருக்குறளும் என்ற தலைப்பில் தமிழ் ஓசை இசை நிகழ்ச்சியினையும் மற்றும் ஊடகவியலாளர் திரு.கார்த்திகைச் செல்வன் அவர்கள் திருக்குறள் விவாத மேடை நிகழ்ச்சியினையும் நடத்த உள்ளனர். மேலும், இந்நிகழ்ச்சியில், பேராசிரியர் முனைவர் பர்வீன் சுல்தானா அவர்கள் புதியதோர் உலகம் செய்வோம் என்ற தலைப்பிலும், பேச்சாளர் பாரதி கிருஷ்ணகுமார் அவர்கள் சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா என்ற தலைப்பிலும், கவிஞர் நெல்லை ஜெயந்தா அவர்கள் அழகே தமிழே என்ற தலைப்பிலும், திரு.ஆர்.விஜயாலயன் அவர்கள் உயர்கல்விக்கு வழிகாட்டல் என்ற தலைப்பிலும், பிக்பாஸ் சீசன் 8 வெற்றியாளர் திரு.முத்துக்குமரன் அவர்கள் தமிழும் நானும் என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்ற உள்ளனர். மாணவர்களுக்கு மொழியாற்றலும், சமூக உணர்வும் மேம்படுத்த சிறப்புப் பயிற்சி வகுப்புகள், பேச்சுப்போட்டி, சிறுகதை எழுதுதல் போட்டி, கவிதை எழுதுதல் போட்டி உள்ளிட்ட தனிநபர்களுக்கான போட்டிகளும், நடனம், நாடகம், பாவனை நாடகம், வினாடிவினா, திருக்குறள் விவாத மேடை உள்ளிட்ட குழுப் போட்டிகளும் நடைபெறவுள்ளது. இந்த போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட உள்ளது. மேலும், மதுரை மேஸ்ட்ரோ சைமன் இன்னிசைக் குழுவினரின் தமிழ்-திரையிசை பாடல்கள் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் பாராளுமன்ற, சட்டமன்ற, உறுப்பினர்கள், உள்ளாட்சிப்பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொள்ளவுள்ளனர். எனவே, இந்த மாநாட்டில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள், தமிழ் அறிஞர்கள், பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் கேட்டுக்கொண்டுள்ளார்.
Next Story

