2 மணி நேர மழையால் நிலவிய குளிர்ச்சி - மழையால் வீடு சேதம்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக சுட்டெரிக்கும் வெயில் மக்களை வாட்டி வதைத்தது. வெயிலின் தாக்கத்தால் வெளியே வர தயங்கிய பொதுமக்கள் பெரும் அவதி யடைந்து வந்த நிலையில், குமாரபாளையம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளான காவேரி நகர், சின்னப்பநாயக்கன்பாளையம், எம்.ஜி.ஆர் நகர், குப்பாண்டபாளையம், தட்டான் குட்டை, எதிர் மேடு, வளையக்காரனூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை சுமார் 03:00 மணியளவில் திடீரென கனமழை பெய்தது.
சுமார் 2 மணி நேரம் பெய்த கன மழையின் காரணமாக சாலைகளில் மழைநீர் வெள்ளமாய் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் கோடை வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சி நிலவிய நிலையில் . பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். மழையின் காரணமாக இரண்டு மணி நேரத்திற்கு மேலாக மின்தடை ஏற்பட்டது. மீண்டும் மாலை 07:00 மணி முதல் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மின் தடை ஏற்பட்டது. குமாரபாளையம் கலைமகள் வீதி, மின் மயானம் எதிரில் லட்சுமி என்பவருக்கு சொந்தமான ஓட்டு வீடு நேற்று மாலை 04:00 மணி அளவில் மழையில் இடிந்து சேதமானது. சேத மதிப்பு குறித்து வருவாய்த்துறையினர் விசாரித்து வருகின்றனர்.