வேலைவாய்ப்பு முகாமில் 2 லட்சம் பணி ஆணைகள்
சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நடத்தப்படும் 100 வேலைவாய்ப்பு முகாம்களின் 100 வது வேலைவாய்ப்பு முகாம் சென்னையில் உள்ள இராணி மேரி கல்லூரியில் நடைபெற்றது. இவ்வேலைவாய்ப்பு முகாமிற்காக 300க்கும் மேற்பட்ட முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் 30000 க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்காக பதிவு செய்து இருந்தனர்.
இம்முகாமில் 8ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் 12 ஆம் வகுப்பு வரை தேர்ச்சி, பட்டதாரிகள், பட்டயப்படிப்பு படித்தவர்கள், ஐ.டி.ஐ. தொழில் கல்வி பெற்றவர்கள், பொறியியல் பட்டம், கணினி இயக்குபவர்கள், தையல் கற்றவர்கள் என அனைத்து வித தகுதியுள்ள நபர்களுக்கும் பணி காலியிடங்கள் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நூறாவது வேலை வாய்ப்பு முகாம் மற்றும் 2 லட்சமாவது பணி நியமன ஆணை வழங்கும் விழாவில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் முன்னிலையில், இந்து சமய அறநிலையங்கள் மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு இரண்டு லட்சமாவது பணி நியமன ஆணையை வழங்கினார் .
உடன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் சுந்தரவல்லி, சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜெகடே, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக இயக்குநர் மு.வே. செந்தில்குமார், மண்டல இணை இயக்குநர் (வேலைவாய்ப்பு) இர .தேவேந்திரன், மற்றும் அரசு அலுவலர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.