சேலத்தில் விதிகளை மீறி இயக்கப்பட்ட வெளிமாநில பதிவெண் கொண்ட 2 ஆம்னி பஸ்கள் பறிமுதல்

சேலத்தில் விதிகளை மீறி இயக்கப்பட்ட வெளிமாநில பதிவெண் கொண்ட 2 ஆம்னி பஸ்கள் பறிமுதல். போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை .
தமிழகத்தில் விதிகளை மீறி வெளி மாநில பதிவு எண்கள் கொண்ட ஆம்னி பஸ்கள் இயக்க கூடாது என்று அரசு உத்தரவிட்டது. அதே போன்று வெளி மாநில பதிவு எண் கொண்ட பஸ்களில் பயணம் செய்ய வேண்டாம் என்றும் போக்குவரத்து துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டு இருந்தது. மேலும் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்கு பிறகு வெளி மாநில பதிவு எண் கொண்ட பஸ்கள் இயக்கினால் பறிமுதல் செய்யப்படும் என்றும் உத்தரவிடப்பட்டு இருந்தது. அதன்படி நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு கடந்த 18-ந்தேதியுடன் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து சேலம் சரகத்திற்குட்பட்ட சேலம், தர்மபுரி வட்டார போக்குவரத்து அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி ஓமலூர் சோதனை சாவடி வழியாக வந்த 2 ஆம்னி பஸ்களை நேற்று அதிகாலை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது குறித்து சேலம் கிழக்கு வட்டார போக்குவரத்து அதிகாரி தாமோதரன் கூறும் போது, வெளிமாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பஸ்கள் சேலத்தில் இயக்கப்படுகிறதா? என்பது குறித்து சோதனை நடத்தி வருகிறோம். அதன்படி நேற்று அதிகாலை ஓமலூர் சோதனைச்சாவடியில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து தூத்துக்குடிக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு வெளி மாநில பதிவு எண் கொண்ட 2 ஆம்னி பஸ்கள் வந்தது. இதையடுத்து ஆம்னி பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அதில் வந்த பயணிகள் சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கிருந்து பயணிகள் அவரவர் செல்ல வேண்டிய ஊர்களுக்கு சென்றனர் என்று கூறினார்.

Tags

Next Story