பைக் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது

கைது
தூத்துக்குடி மில்லர்புரம், சின்னமணி நகரை சேர்ந்த வீரபுத்திரன் மகன் யோகேஸ்வரன் (45) என்பவர் கடந்த 02.02.2024 அன்று தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுந்தரவேல்புரம் பகுதியில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சிறிது நேரம் கழித்து வந்து பார்க்கும்போது அந்த இருசக்கர வாகனம் திருடு போயுள்ளது. இதுகுறித்து யோகேஸ்வரன் அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் கேல்கர் சுப்ரமண்ய பால்சந்திரா மேற்பார்வையில் வடபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாணிக்கராஜ் மற்றும் தெர்மல்நகர் காவல் நிலைய தலைமை காவலர் மாணிக்கராஜ், முதல் நிலை காவலர் மகாலிங்கம், மத்தியபாகம் காவல் நிலைய முதல் நிலை காவலர் செந்தில், முத்தையாபுரம் காவல் நிலைய முதல் நிலை காவலர் சாமுவேல், காவலர் முத்துப்பாண்டி, தென்பாகம் காவல் நிலைய காவலர் திருமணிராஜன் ஆகியோர் அடங்கிய தூத்துக்குடி நகர உட்கோட்ட தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதில், தூத்துக்குடி சிலுவைப்பட்டி துரைசிங் நகரை சேர்ந்தவர்களான சங்கிலிகருப்பன் மகன் விக்ரம் (எ) விக்கி (22) மற்றும் முருகன் மகன் சுரேஷ்குமார் (24) ஆகிய இருவரும் யோகேஸ்வரனின் இருசக்கர வாகனத்தை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து தனிப்படை போலீசார் விக்ரம் (எ) விக்கி மற்றும் சுரேஷ்குமார் ஆகிய இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த திருடப்பட்ட ரூ.60ஆயிரம் மதிப்புள்ள இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வடபாகம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட விக்ரம் (எ) விக்கி மீது ஏற்கனவே தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் திருட்டு வழக்குகள் உட்பட 4 வழக்குகளும், தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் 2 வழக்குகளும், எப்போதும்வென்றான் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், எட்டையாபுரம் காவல் நிலையத்தில் 2 வழக்குகளும் என மொத்தம் 9 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது."
