சாலை அமைத்த பில் தொகையை அனுமதிக்க காண்டிராக்டரிடம் ரூ.61 ஆயிரம் லஞ்சம் வாங்கிய 2 பேர் கைது
கைது
சாலை அமைத்த பில் தொகையை அனுமதிக்க காண்டிராக்டரிடம் ரூ.61 ஆயிரம் லஞ்சம் வாங்கிய 2 பேர் கைது.சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு.
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே வரகூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில் (வயது 35). கட்டிட காண்டிராக்டரான இவர் சாலை ஒப்பந்த பணிகளை செய்து வருகிறார். இவர் சமீபத்தில் தலைவாசல் பகுதியில் 2 இடங்களில் ரூ.91 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைத்தார். இதற்கான பில் தொகையை அனுமதிக்க கோரி செந்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அங்கு உதவி செயற்பொறியாளராக பணியாற்றும் ரவிச்சந்திரன் (52) மற்றும் இளநிலை வரைவாளர் சாகுல் அமீது (45) ஆகியோர் பில் தொகையை அனுமதிக்க அவரிடம் ரூ.61 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. அதை கொடுக்க விரும்பாத செந்தில் இதுகுறித்து சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் தெரிவித்தார். போலீசாரின் அறிவுரையின் பேரில் செந்தில் நேற்று மாலை ரசாயன பவுடர் தடவிய ரூ.61 ஆயிரத்தை ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்துக்கு கொண்டு சென்றார். அவரிடம் இருந்து லஞ்ச பணத்தை சாகுல் அமீது மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் பெற்றனர். அங்கு மறைந்திருந்த போலீஸ் துணை சூப்பிரண்டு கிருஷ்ணராஜன் தலைமையிலான போலீசார் அவர்கள் 2 பேரையும் கையும், களவுமாக பிடித்தனர். அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். மேலும் அங்குள்ள ஒரு அறையில் அவர்கள் வைத்திருந்த கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 21 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த லஞ்ச பணம் யார் கூறியதின் பேரில் அவர்கள் வாங்கினார்கள் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
Next Story