ரயில் மோதி பெண் உட்பட 2பேர் படுகாயம்!
ரயில்
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வள்ளுவர் நகரை சேர்ந்தவர் காந்தாரி மகன் மந்திர மூர்த்தி (29). இவரும், இவரது நண்பர் செல்வமாரியப்பனும் நேற்று முன்தினம் இரவில் கோவில்பட்டி வேலாயுதபுரம் அருகே உள்ள வசந்த நகர் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தின் அருகே அமர்ந்து மது குடித்துள்ளனர்.
பின்னர் மதுபோதையில் இருந்த மந்திரமூர்த்தி தண்டவாளம் அருகே நின்று செல்பி எடுத்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது அவ்வழியாக சென்ற குருவாயூர் விரைவு ரயில் மோதியதில், தூக்கி வீசப்பட்ட மந்திரமூர்த்தி படுகாயம் அடைந்தார்.
அவரை செல்வ மாரியப்பன் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ரயில் மோதி பெண் காயம் கோவில்பட்டி நடராஜபுரம் 7-ஆவது தெருவை சேர்ந்தவர் ராஜா. டீக்கடை நடத்தி வருகிறார்.
இவரது மனைவி மகேஸ்வரி (38). இவர் நேற்று முன்தினம் இரவு கோவில்பட்டி மெயின் ரோடு கடலைக்கார தெரு சந்திப்பில் கணவர் நடத்தி வரும் டீ கடைக்கு சென்று விட்டு மார்க்கெட் பின்புறமுள்ள ரயில்வே தண்டவாளத்தை கடந்து வீட்டுக்கு செல்ல முயன்றுள்ளார்.
அப்போது அனந்தபுரி விரைவு ரயில் மகேஸ்வரி மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார். தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்குச் விரைந்து சென்ற ரயில்வே போலீசார் அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக அவரை நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த 2 சம்பவங்கள் குறித்தும் தூத்துக்குடி ரயில்வே போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.