விபத்தில் 2 மாணவர்கள் காயம்: ஆட்டோ டிரைவர் தற்கொலை
பைல் படம்
சேலம் அருகே உள்ள மேட்டுப்பட்டி தாதனூர் பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 50). இவர் வாடகைக்கு ஆட்டோ ஓட்டி வந்தார். இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். மணி நேற்று மாலை அயோத்தியாப்பட்டணம் பகுதியில் உள்ள பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளை ஆட்டோவில் ஏற்றி கொண்டு வந்தார். அவர் தேவாங்கர் காலனியில் சில மாணவர்களை இறக்கிவிட்டு, பின்னர் பாலாஜி நகர் காலனியை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது சேலத்தில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற அரசு பஸ் ஆட்டோ மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் ஆட்டோவில் இருந்த 2 மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டது.
இதை பார்த்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள், காயம் அடைந்த மாணவர்களை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே விபத்தில் மாணவர்கள் இறந்து விட்டார்களோ? என ஆட்டோ டிரைவர் பயந்தார். மேலும் மனமுடைந்த மணி ஆட்டோ ஸ்டார்ட் செய்வதற்கு பயன்படுத்தப்படும் கயிற்றை எடுத்து கொண்டு அருகில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வீராணம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று மணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.