சாலையில் நின்ற லாரி மீது கார் மோதி மருத்துவ கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி
விபத்து

சேலம் அருகே நள்ளிரவில் விபத்து - 2 பேர் பலி மேலும் 2 மாணவர்கள் படுகாயம்
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் வெட்டு வெந்நியை அடுத்த தறியன்விளையை சேர்ந்தவர் பிரபாகர் சிங், இவரது மகன் கேம்கோ (21), தக்கலை அருகே உள்ள மேக்காமண்டபத்தை சேர்ந்தவர் சத்தியபிரவீன் (21), சேலம் அங்கம்மாள் காலனி குப்தா நகரை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் கவுதம் (21), சரண் (21) மற்றும் ஜெகநாத் (21) இவர்கள் 5 பேரும் புதுச்சேரியில் உள்ள மகாத்மா காந்தி மருத்துவ கல்லூரியில் 3-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படித்து வருகின்றனர். லாரி மீது மோதி விபத்து இந்தநிலையில் கல்லூரி விடுமுறையையொட்டி மாணவர்கள் 5 பேரும் கேம்கோவுக்கு சொந்தமான காரில் சேலத்திற்கு புறப்பட்டனர். காரை மாணவர் கேம்கோ ஓட்டி வந்தார். இவர்கள் வந்த கார் நள்ளிரவு 12.30 மணியளவில் சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மல்லூர் அருகே உள்ள பொய்மான் கரடு பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு சாலையோரம் உள்ள பெட்ரோல் பங்க் அருகில் காற்றாடி என்ஜின் ஏற்றிய டாரஸ் லாரி டீசல் போடுவதற்காக நின்று கொண்டிருந்தது . இதை கவனிக்காத கேம்கோ கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த லாரியின் பின் பகுதியில் பயங்கரமாக மோதினார். இதில் கார் அப்பளம் போல நொறுங்கியது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த மாணவர் கேம்கோ மற்றும் பின் சீட்டில் அமர்ந்திருந்த மாணவர் கவுதம் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். காயம் அடைந்த மாணவர்களை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். விபத்தில் இறந்த கேம்கோ மற்றும் கவுதமின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தகவல் இந்த விபத்து குறித்து மல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story



