ராமநாதபுரம்: 300 கோடி மோசடி - 2 ஆசிரியர்கள் கைது
5௦௦ கோடி மோசடி செய்த ஆசிரியர் கைது
சென்னையைச் சேர்ந்த நீதிமணி, இவரது மனைவி மேனகா மற்றும் ராமநாதபுரத்தைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் ஆனந்த் ஆகியோர், புல்லியன் பின்டெக் என்ற நிதி நிறுவனம் நடத்தி, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில், இந்நிறுவனத்தில் முதலீடு செய்தால் 9 சதவீத வட்டி மற்றும் 2 ஆண்டுகளில் பணம் இரட்டிப்பு எனக்கூறி முதலீட்டாளர்களை கவர்ந்தனர். இதில் நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் கோடிக்கணக்கான ரூபாயை முதலீடு செய்தனர்.
முதலீட்டாளர்களுக்கு 2020 மார்ச் முதல் பணம் வழங்கவில்லை. அதனையடுத்து ராமநாதபுரம் மூலக்கொத்தளத்தைச் சேர்ந்த துளசிமணிகண்டன் தான் உள்ளிட்ட நண்பர்கள் 58 பேர் ரூ. 3 கோடி முதலீடு செய்தததாகவும், பின்னர் பணத்தை தராமல் மோசடி செய்துவிட்டதாக ராமநாதபுரம் பஜார் போலீஸில் 2020-ல் புகார் அளித்தார்.
அதனடிப்படையில் போலீஸார் நீதிமணி, ஆனந்த், மேனகா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து, நீதிமணி, ஆனந்த் ஆகியோர் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதனையடுத்து காரைக்குடியைச் சேர்ந்த ஆசிரியை கற்பகலில்லி, ரூ. 40 லட்சம் மோசடி செய்துவிட்டதாக, ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் அளித்த புகாரின் அடிப்படையில் ஆசிரியர் ஆனந்த், நீதிமணி, மேனகா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த 2 வழக்குகளையும் 8.9.2020-ல் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது.
மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தநிலையில் இவ்வழக்கானது 14.10.2022 முதல் ராமநாதபுரம் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் இவ்வழக்கில் முக்கிய ஏஜெண்டாக செயல்பட்டு கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்ததாக கும்பரம் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் எம்.ஆரோக்கிய ராஜ்குமார்(45), ராமநாதபுரம் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் சி.முருகவேல்(42) ஆகியோரை கடந்த 17-ம் தேதி கைது செய்து, மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் விசாரணைக்கு மதுரை தமிழ்நாடு தொழில் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் (டான்பெட் நீதிமன்றம்) ஆஜர்படுத்தினர். அப்போது ராமநாதபுரம் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் இரண்டு பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்ய நீதிமன்றத்தில் அனுமதி கேட்டனர். அதனடிப்படையில் இருவரையும் 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார். அதனையடுத்து ராமநாதபுரம் பொருளாதார குற்றப்பிரிவு போலீார் 2 பேரிடமும், முதலீடு, மோசடி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிந்து இன்று மாலை மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.