குமரி : பால் டெம்போ மோதி 2 வாலிபர்கள் பலி
குமரி மாவட்டம் புதுக்கடை அருகே அம்சி பகுதியை சேர்ந்தவர் விபின் (வயது 19), கூலி தொழிலாளி. இவரும் அதே ஊரை சேர்ந்த வினித் (20) என்ற பிளம்பிங் தொழிலாளியும் நண்பர்கள். வினித்துக்கு செல்போன் வாங்குவதற்காக நேற்று இரவு 2 பேரும் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் காப்புக்காடு பகுதிக்கு சென்று, அங்குள்ள ஒரு கடையில் செல்போன் ஆர்டர் செய்தனர்.
பின்னர் குழித்துறை பகுதியில் உள்ள விபின் உறவினர் வீட்டுக்கு சென்றனர். மோட்டார் சைக்கிளில் குழித்துறை அருகே ஆற்றுப் பாலம் பகுதியில் வந்தபோது எதிரே கேரளாவில் இருந்து பால் ஏற்றி வந்த மினி டெம்போ எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் 2 பேரும் சாலையில் தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே விபின் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
களியக்காவிளை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வினித் படுகாயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரும் சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை இறந்தார்.