20 -ம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு

நினைவு ஸ்தூபிக்கு தமிழக உணவுத்துறை செயலர் அஞ்சலி
கடந்த 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரழிவில் நாகை மாவட்டத்தில் 6065 பேர் உயிரிழந்தனர். உயிர் இழந்தவர்களின் நினைவாக, நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், நம்பியார் நகர் உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்களில் சுனாமி நினைவு ஸ்தூபி நிறுவப்பட்டுள்ளது. வருகிற 26 -ம் தேதி 20- ம் ஆண்டு சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்பட உள்ளது. எனவே, நாகை கீச்சாங்குப்பத்திற்கு தமிழக உணவுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தன் மனைவியுடன் நேற்று வருகை தந்தார். கீச்சாங்குப்பத்தில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவு ஸ்தூபிக்கு உணவுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தீபம் ஏற்றி மலர் தூவி சுனாமியில் உயிர் இழந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டி பிரார்த்தனை செய்தார். பின்னர், சாமந்தான் பேட்டையில் உள்ள அன்னை சத்யா அரசு குழந்தைகள் காப்பகத்திற்கு சென்றார். அங்கு சுனாமியின் போது பெற்றோர்களை இழந்து, காப்பகத்தில் தங்கி படித்து வளர்ந்து வந்த 40-க்கும் மேற்பட்ட பிள்ளைகளை சந்தித்து பேசினார். இதில், அரசு காப்பகத்தில் தங்கி படித்து தற்போது திருமணம் ஆகி குழந்தைகளை பெற்றெடுத்த பெண்களை உணவுத்துறை செயலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் ஆகியோர் சந்தித்து நலம் விசாரித்தனர். பின்னர், சுனாமியில் பெற்றோர்களை இழந்த பெண்களுக்கு சால்வை அணிவித்து புத்தகங்களை பரிசளித்தார். பிறந்து 22 நாட்களே ஆன பெயர் வைக்காத ஒரு பெண் குழந்தைக்கு, ராஜி என பெயர் சூட்டினார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது சுனாமி பேரிடரால் பாதிக்கப்பட்டாலும் அதிலிருந்து மீண்டு வந்து, இன்று சமூகத்தில் பல்வேறு நிலைகளில் உயர்ந்துள்ளனர். இவர்கள் எனக்கு எடுத்துக்காட்டாகவும், உந்துதலாகவும் உள்ளனர். சுனாமியின் போது என்னை அப்பா என அழைத்தவர்கள், இன்று பெரியவர்களாக வளர்ந்து திருமணம் ஆகி குழந்தைகளை பெற்றெடுத்து என்னை தாத்தா என்ற ஸ்தானத்திற்கு பிரமோஷன் கொடுத்துள்ளனர் என்றார். பின்னர் பொங்கல் தொகுப்பு குறித்த கேள்விக்கு பதில் பதில் அளித்த அவர், பொங்கல் தொகுப்பு குறித்து முதல்வர் அறிவிப்பார். இந்த தொகுப்பு வழங்குவதற்காக, அரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்டவற்றை கொள்முதல் செய்ய ஏற்பாடு நடந்து வருகிறது. பொங்கல் பண்டிகைக்கு 5 நாட்களுக்கு முன்னதாகவே தொகுப்பு வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Next Story