20 ஆண்டுகளாக ரூ.47 லட்சம் சொத்துவரி செலுத்தாத வணிக வளாகத்தின் முன் குப்பைகளை கொட்டிய மாநகராட்சி: ரூ.5 லட்சம் வரியை செலுத்திய உரிமையாளர்

மாநகராட்சி
தஞ்சாவூரில், 20 ஆண்டுகளாக, 47 லட்சம் ரூபாய் சொத்துவரி செலுத்தாத வணிக வளாகத்தின் முன் குப்பைகளை, மாநகராட்சி நிர்வாகம் கொட்டியதால், உடனடியாக 5 லட்சம் ரூபாய் வரியை வணிக வளாக நிர்வாகத்தினர் செலுத்தினர். தஞ்சாவூர், சீனிவாசன் பிள்ளை சாலையில், நல்லைய்யா வணிக வளாகம் உள்ளது. இங்கு 80 கடைகள் உள்ளன. இந்நிலையில் கடந்த 20 ஆண்டுகளாக, சொத்துவரி 47 லட்சம் ரூபாயை மாநகராட்சிக்கு செலுத்தாமல் இருந்து வந்தனர். மாநகராட்சி நிர்வாகத்தினர் பலமுறை கேட்டும் வரியை செலுத்தவில்லை. இதையடுத்து, வணிக வளாகத்திற்கு, மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது. வணிக வளாக நிறுவனத்தினர் அதற்கு உரிய பதில் அளிக்கவில்லை. இதையடுத்து வெள்ளிக்கிழமை காலை மாநகராட்சி நிர்வாகத்தினர், வணிக வளாகத்தின் ஒரு நுழைவு வாயிலில் குப்பை வண்டியை நிறுத்தியும், மற்றொரு வாயிலில் குப்பையை கொட்டியும் வைத்தனர். இதனால், வணிக வளாகத்துக்கு வரும் வியாபாரிகள், வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் முகம் சுளித்தனர். மேலும், உள்ளே யாரும் செல்ல முடியாமலும், உள்ளே இருந்தவர்கள் வெளியே வர முடியாமலும் தவித்தனர்.  பிறகு, வணிக வளாக உரிமையாளர்கள் உடனடியாக, ஐந்து லட்சம் ரூபாய்க்கான காசோலையை மாநகராட்சி அலுவலகத்தில் செலுத்தினர். இதைத் தொடர்ந்து, வணிக வளாகம் முன்பு நிறுத்தப்பட்ட குப்பை வண்டியும், கொட்டப்பட்டிருந்த குப்பையும் அகற்றப்பட்டது. இது குறித்து மாநகராட்சி அலுவலர்கள் கூறியதாவது: தஞ்சாவூர் மாநகராட்சிக்கு சொத்துவரியை நீண்ட காலம்  செலுத்தாதவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, வரி வசூல் பணிகள் துவங்கியுள்ளது.  வணிக வளாகத்தினர் கடந்த 20 ஆண்டுகளாக சொத்து வரி செலுத்தவில்லை. கடந்த ஒரு மாதமாக மாநகராட்சி அதிகாரிகள் வரியை வசூலிக்க நடையாய் நடந்தாலும், அவர்களிடம் வரி வசூலிக்க முடியவில்லை. இதையடுத்து தான் மாநகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கையை கையாண்டது" இவ்வாறு தெரிவித்தனர். மாநகராட்சியின் இந்த நடவடிக்கைக்கு ஆதரவாகவும், எதிராகவும் விமர்சனங்கள முன்வைக்கப்பட்டது.
Next Story