20 ஓவர் கிரிக்கெட் - சேலம் வீரர்கள் சாதனை

சேலம் கிரிக்கெட் அகாடமி அணி வீரர்கள்
ஆல் இந்தியா கிராமின் கிரிக்கெட் அசோசியேசன் சார்பில் தேசிய அளவிலான 10-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கோவாவில் நடைபெற்றது. தமிழ்நாடு, ஆந்திரா, மராட்டியம், தெலுங்கானா, சத்தீஷ்கார் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 8க்கும் மேற்பட்ட கிரிக்கெட் அணிகள் கலந்து கொண்டு விளையாடின. இதில் தமிழ்நாடு அணிக்காக சேலத்தை சேர்ந்த சேலம் கிரிக்கெட் அகாடமி சார்பில் கேப்டன் நகுல் வர்ஷன் தலைமையிலான 16 வீரர்கள் கலந்து கொண்டனர். அணியின் பயிற்சியாளராக முத்துகுமார் , மேலாளர் சக்திவேல் ஆகியோர் கொண்ட குழு கோவாவிற்கு சென்றது.
பல்வேறு சுற்றுகளில் வெற்றி பெற்ற தமிழக அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இறுதி போட்டியில் தமிழ்நாடு அணியும், மராட்டியம் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த மராட்டிய அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்னர் பேட்டிங் செய்த தமிழக அணி 8 விக்கெட் இழந்து 125 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் தமிழக அணி 2-வது இடம் பிடித்து வெள்ளி கோப்பையை வென்றது. தமிழக அணி சார்பில் பங்கேற்று வீரர்கள் சேலம் திரும்பினர். சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்திற்கு வந்த கிரிக்கெட் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர்களுக்கு சால்வையும், பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
