200 கிலோ கஞ்சா மூட்டையுடன் கடலில் தத்தளித்த இலங்கையை சேர்ந்த இருவர் கைது

கஞ்சா கடத்தல்
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன், ராமச்சந்திரன் என்ற இரு மீனவர்கள், மறவக்காடு கடற்பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை 5:30 மணியளவில், மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது, பிளாஸ்டிக் டீசல் கேனை பிடித்த படி இருவர் கடலுக்குள் தத்தளித்துக் கொண்டு இருந்தனர். அவர்களை கண்ட சுப்பிரமணியன், ராமசந்திரன் கடலில் தத்தளித்த இருவரையும் மீட்டனர். மேலும், மீட்கப்பட்ட இருவரின் அருகே ஏழு மூட்டைகள் மிதிந்துள்ளன. இது குறித்து, சுப்பிரமணியன் அதிராம்பட்டினம் கடலோர காவல்துறைக்கு தகவல் அளித்து விட்டு, மீட்கப்பட்ட இரண்டு நபர்களையும், மூட்டைகளையும் தங்களின் படகில் ஏற்றிக்கொண்டு, கீழத்தோட்டத்திற்கு வந்தனர். அங்கு சென்ற, அதிராம்பட்டினம் கடற்கரை காவல்துறையினர்  மூட்டைகளை பிரித்து பார்த்த போது, கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது. மேலும், பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மூட்டைகளையும், மீட்கப்பட்ட இருவரையும் அதிராம்பட்டினம் காவல்துறையினர் வசம் ஒப்படைக்கப்பட்டனர். அதிராம்பட்டினம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், இலங்கை, தலைமன்னார் பகுதியை சேர்ந்த அமலதாசன் மகன் அஜந்தன் (36), வரப்பிரகாசம் மகன் ஜீவானந்தம் (51), என்பதும் தெரியவந்தது. மேலும், தமிழகத்தை சேர்ந்த கஞ்சா வியாபாரிகள் மூலம், சர்வதேச எல்லையில், கஞ்சா மூட்டைகளை படகில் மாற்றி இலங்கைக்கு கடத்தி செல்ல முயன்றுள்ளனர். ஆனால், படகு சேதமடைந்த நிலையில்  கடலில் மூழ்கியது. இருப்பினும், அஜந்தன், ஜீவானந்தம் இருவரும் கஞ்சா மூட்டையை உடலில் கட்டிக்கொண்டு, கடலில் தத்தளித்துள்ளனர். காற்றின் வேகத்தால், இந்திய கடல்பகுதியில் வந்ததால், கீழத்தோட்டம் மீனவர்களால் அஜந்தன், ஜீவானந்தம் மீட்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அதிராம்பட்டினம் காவல்துறையினர் அஜந்தன், ஜீவானந்தம் இருவரையும் கைது செய்து, ஏழு மூட்டைகளில் இருந்த 90 பண்டல்கள் அடங்கிய சுமார் 200 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, கடல் வழியாக கஞ்சாவை இலங்கைக்கு கடத்த முயன்ற கும்பல் குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு 50 லட்சம் ரூபாய் எனக் கூறப்படுகிறது.
Next Story