200 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
பிளாஸ்டிக் பறிமுதல்
கிருஷ்ணகிரி நகராட்சி பகுதியில், அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் 200 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு, கடை உரிமையாளர்களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையர் ஸ்டான்லி பாபு உத்தரவின் படி, நகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கொண்ட நான்கு குழுக்கள், கிருஷ்ணகிரி நகராட்சி பகுதியில் உள்ள பெங்களூரு சாலை, சென்னை சாலை, சேலம் சாலை மற்றும் பழைய சப்-ஜெயில் சாலை பகுதிகளில் உள்ள மொத்த விற்பனை கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது மத்திய, மாநில அரசுகளால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் சுமார் 200 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. அதனை விற்பனை செய்வதற்காக வைத்திருந்த கடை உரிமையாளர்களுக்கு மொத்தம் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது.
இந்த கள ஆய்வை, துப்புரவு அலுவலர் ராமகிருஷ்ணன், மேலாளர் தாமோதரன், துப்புரவு ஆய்வாளர்கள் அங்கமுத்து, மாதேஸ்வரன், துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள், களப்பணி உதவியாளர், தூய்மை இந்தியா இயக்க மேற்பார்வையாளர், பரப்புரையாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் மேற்கொண்டனர்.