20.09.2025 அன்று நடைபெறவுள்ள மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

20.09.2025 அன்று நடைபெறவுள்ள மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
X
இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் Candidate Login –ல் தங்களது விவரங்களை இலவசமாக பதிவு செய்து பயன்பெறலாம்.
20.09.2025 அன்று நடைபெறவுள்ள மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை சிறப்பாக நடத்த மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாட்டு பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி தலைமையில் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டத்தில் 20.9.2025 அன்று நடத்தப்படவுள்ள மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை சிறப்பாக நடத்த மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாட்டு பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி. தலைமையில் இன்று (11.09.2025) பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது: பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் தமிழ்நாடு மாநில ஊரக / நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 20.09.2025 அன்று சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் பெரம்பலூர், அரியலூர், சென்னை, திருச்சி, திருப்பூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு தனியார் முன்னணி நிறுவனங்கள் கலந்துகொண்டு 10,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கான பணி வாய்ப்புகள் வழங்க உள்ளார்கள். எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை, ஐடிஐ, டிப்ளமோ, அக்ரி, நர்சிங், பார்மஸி, பி.இ., பி.டெக், ஹோட்டல் மேனேஜ்மென்ட் ஆகிய கல்வித் தகுதியுடைய 18 முதல் 40 வயதிற்குட்பட்டவர்களை தேர்வு செய்யவுள்ளனர். மேலும் தொழில் பழகுநர் மற்றும் இலவச திறன் பயிற்சிக்கு வழிகாட்டுதல்கள் மற்றும் சுயதொழில் மற்றும் அரசு கடனுதவி தொடர்பான ஆலோசனைகள், அயல்நாட்டு வேலைவாய்ப்பிற்கான வழிகாட்டுதல்களும் வழங்கப்படவுள்ளது. இதில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலை நாடுநர்கள் தங்களது ஆதார் எண், சுயவிபரம் (பயோடேட்டா) மற்றும் கல்விச் சான்றுகளுடன் 20.09.2025 சனிக்கிழமை அன்று காலை 08.00 முதல் மாலை 3.00 மணி வரை சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறவுள்ள மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம். இம்முகாம் குறித்து இளைஞர்களுக்கும், வேலை நாடுநர்களுக்கும் தகவல் சென்று சேரும் வகையில் தேவையான விழிப்புணர்வு பணிகளை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பிற துறைகளுடன் இணைந்து மேற்கொள்ள வேண்டும். மேலும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் இடத்தில் மருத்துவ குழு தயார் நிலையில் இருக்க வேண்டும். வேலைவாய்ப்பு முகாம் தொடர்பான விளம்பர ஸ்டிக்கர் மற்றும் நோட்டீஸ்களை பேருந்துகளில் ஒட்டி விளம்பரப்படுத்தி, முகாம் நடைபெறும் இடத்திற்கு சிறப்பு பேருந்து வசதிகளை அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் அவர்களும் மேற்கொள்ள வேண்டும். வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் நாளன்று தடையில்லா மின்சாரம், குடிநீர் வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் முறையாக வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வேலைவாய்ப்பு முகாம் சிறப்பாக நடைபெற அனைத்து துறை அலுவலர்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் Candidate Login –ல் தங்களது விவரங்களை இலவசமாக பதிவு செய்து பயன்பெறலாம். இவ்வாறு தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (பொது) வைத்தியநாதன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சாகுல் ஹமீது, மாவட்ட இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் வினோத்குமார், திட்ட இயக்குநர் ( மகளிர் திட்டம்) கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story