2025ம் ஆண்டு புத்தகத் திருவிழா துவக்கம்

X
சிவகங்கை மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அனைத்து துறை அரசு அலுவலர்களுடன் 2025ஆம் ஆண்டு புத்தக திருவிழா முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக, இன்றையதினம் (03.02.2025) மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் ஆலோசனைக் கூட்டம் மேற்கொண்டார். பின்னர் மாவட்ட ஆட்சியர் கூறும்போது சிவகங்கை மாவட்டத்தில், கடந்த மூன்று ஆண்டுகள் சிறப்பாக நடைபெற்ற புத்தக திருவிழா, இந்தாண்டும் 2025ம் ஆண்டுக்கான புத்தகத்திருவிழா, பிப்ரவரி 21ம் தேதி முதல் மார்ச் 2ம் தேதி வரை, சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் சிறப்பாக நடைபெற உள்ளது. இப்புத்தகத்திருவிழாவில், நுாற்றுக்கும் மேற்பட்ட பதிப்பகத்தார்களின் பல்வேறு தலைப்புகளிலுமான இலட்சக்கணக்கிலான புத்தகங்கள், நாள்தோறும் தலைசிறந்த பேச்சாளர்களின் சொற்பொழிவுகள், சிந்தனை பட்டிமன்றங்கள், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. அத்துடன், குழந்தைகளுக்கான திரைப்பட அரங்கு, அறிவியல் கண்காட்சிகள், கல்லுாரி மாணவர்களுக்கு, வேலை வாய்ப்பினை வழங்கும் போட்டித்தேர்வுகளுக்கான நிகழ்ச்சிகள், அரசு அலுவலர்களுக்கிடையேயான பல்வேறு போட்டிகள் போன்றவையும் இடம் பெற திட்டமிடப்பட்டுள்ளன. சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்கள், அரசு அலுவலர்கள் ஆகியோர் தங்கள் குடும்பத்துடன் இப்புத்தகத்திருவிழாவிற்கு வருகை தந்து, கலை நிகழ்ச்சிகளை கண்டு களிப்பதுடன், புத்தகங்களையும் வாங்கி, தங்களது வாசிப்பு திறனை மேம்படுத்திக்கொண்டு பயன்பெறும் வகையில், இப்புத்தக திருவிழாவானது சிறப்பாக நடைபெறவுள்ளது. மேலும், நல்ல படைப்பாற்றல் கொண்ட எழுத்தாளர்கள், தாங்கள் எழுதிய புத்தகங்களை புத்தகத்திருவிழா நடைபெறும் நாட்களில் வெளியிடுவதற்கு ஏற்றவாறு, முன்னதாகவே, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சிப்பிரிவில் ஒப்படைத்திடவும் அறிவுறுத்தப்படுகிறது. கடந்த ஆண்டுகளில் நமது சிவகங்கை மாவட்டத்தில் சிறப்பாக நடைபெற்ற புத்தக திருவிழாவை இந்தாண்டும் சிறப்பாக நடத்திட அனைத்து துறை அரசு அலுவலர்களும் ஒருங்கிணைந்து, தங்களுக்கான ஒதுகப்பட்டுள்ள பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், தேவகோட்டை சார் ஆட்சியர் ஆயுஷ் வெங்கட் வட்ஸ், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் வானதி, மகளிர் திட்ட இயக்குநர் கவிதப்பிரியா, சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் விஜயகுமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்துக்கழுவன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ரமேஷ் உட்பட அனைத்து துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story

