2026 தேர்தல் முன்னிட்டு கோவையில் பிரச்சாரத்தை தொடங்கிய எடப்பாடி பழனிசாமி!

2026 சட்டசபை தேர்தலுக்கான முதல் கட்ட பிரச்சாரத்தை கோவையில் தொடங்கியது அதிமுக.
2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளும் தேர்தல் வேலைத் திட்டங்களை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன. இந்தத் தேர்தலை வெற்றிகரமாக சந்திக்க அதிமுகவும் தனது பிரச்சாரத்தை முழு வீச்சில் ஆரம்பித்துள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற திட்டத்தின் கீழ் மக்களுடன் நேரில் சந்திக்கும் பிரச்சாரத்தை நேற்று (ஜூலை 7) கோவை மேட்டுப்பாளையத்தில் தொடங்கினார். பிரச்சாரத்துக்கு முன், தேக்கம்பட்டியில் உள்ள வன பத்ரகாளியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அவர், பின்னர் விவசாயிகள், நெசவாளர்கள் மற்றும் செங்கல் தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார். மாலை நேரத்தில் மேட்டுப்பாளையம் - உதகை சாலையில் அரசு மருத்துவமனை அருகிலிருந்து பிரமாண்ட ரோடு ஷோவிற்கு தொடக்கம் வைத்தார். பொதுமக்கள் இருபுறமும் வரிசையாக நின்று மலர் தூவி உற்சாகமாக வரவேற்றனர். எடப்பாடி பழனிசாமி பேருந்திலிருந்து இறங்கி சாலையில் நேரடியாக நடந்து சென்றார், மக்களுக்கு கரம் அசைத்து வாழ்த்து தெரிவித்தார். சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் இந்த நடைபயண ரோடு ஷோ நடைபெற்றது. பின்னர் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே பிரச்சார மேடையில் பொதுமக்களை நோக்கி உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் எல். முருகன், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Next Story