ரூ.206.10 இலட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்டப்பணிகள்

ரூ.206.10 இலட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்டப்பணிகள்
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்குட்பட்ட ஊராட்சிகளில் 11 வளர்ச்சி திட்டப்பணிகள் ரூ.206.10 இலட்சம் மதிப்பீட்டில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில், அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் முடிவுற்ற திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில், கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் பொதுமக்களின் பயன்பாட்டிற்கென திறந்து வைத்தார். பின்னர் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களுக்கு பயனுள்ள வகையிலான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்துவது மட்டுமன்றி, தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் வளர்ச்சி பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், சிவகங்கை மாவட்டத்தின் கடைகோடி பகுதியில் வசிக்கும் மக்களின் தேவைகள் அறிந்து அவர்களின் கோரிக்கைகளுக்கு முன்பாகவே, அரசின் பல்வேறு திட்டங்களின் கீழும் மக்கள் பிரதிநிதிகள் வாயிலாகவும் தொடர்ந்து பல்வேறு வளர்ச்சி பணிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் முடிவுற்ற திட்டப்பணிகள் அனைத்தும் பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன்படி, திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், கோட்டையிருப்பு ஊராட்சிக்குட்பட்ட காக்காளிப்பட்டி கிராமத்தில் குழந்தைகள் நேய பள்ளி உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.47.96 இலட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கட்டப்பட்டுள்ள இரண்டு புதிய வகுப்பறை கட்டிடங்களும், திருவுடையார்பட்டி ஊராட்சிக்குட்பட்ட திருவுடையார்பட்டி கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2021-22ன் கீழ் ரூ.07.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய நியாய விலைக்கடையினையும், நெடுமறம் ஊராட்சிக்குட்பட்ட உடையநாதபுரம் கிராமத்தில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2023-24ன் கீழ் ரூ.07.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பயணியர் நிழற்குடையினையும், கண்டவராயன்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பையூர் கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2023-24ன் கீழ் ரூ.09.77 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய நியாய விலைக்கடையினையும், ஆ.தெக்கூர் ஊராட்சிக்குட்பட்ட வடக்கூர் கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2024-25ன் கீழ் ரூ.16.55 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி கட்டிடமும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, தமிழகத்தில் ஒவ்வொரு ஊராட்சி அளவிலும், ஊராட்சி செயலகம் அமைப்பதற்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளதன் அடிப்படையில், 600-க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சி செயலகம் தமிழகம் முழுவதும் அமைப்பதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டு, அதற்கான பணிகள் சிறப்பாக நடைபெற்று, பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வையகளத்தூர் சுண்டக்காடு ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மற்றும் 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.42.65 இலட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள கிராம செயலக கட்டிடம் சிறப்பாக கட்டி முடிக்கப்பட்டு, இன்றைய தினம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இவ்வூராட்சி செயலகத்தில் கிராம நிர்வாக அலுவலகம், இணையதள சேவை, ஊராட்சி மன்றத்தலைவர்களுக்கான அறை, கூட்டரங்கம் மற்றும் அலுவலர்கள் பிரிவிற்கான தனி அறை ஆகியவைகள் தனித்தனியாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு தேவையானவைகளை ஒரே இடத்தில் பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேபோன்று குமாரபேட்டை ஊராட்சிக்குட்பட்ட சென்னல்குடி கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2024-25ன் கீழ் ரூ.30.10 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடமும், வடக்கு இளையாத்தங்குடி ஊராட்சிக்குட்பட்ட கீரணிப்பட்டி கிராமத்தில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2022-23ன் கீழ் ரூ.06.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பயணியர் நிழற்குடையும், சேவினிபட்டி ஊராட்சிக்குட்பட்ட சேவினிபட்டி ஆதிதிராவிடர் காலனி பகுதியில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2022-23ன் கீழ் ரூ.08.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நாடக மேடையும், ஆவிணிபட்டி ஊராட்சிக்குட்பட்ட ஆவிணிபட்டி ஐயப்பா நகர் பகுதியில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2023-24ன் கீழ் ரூ.07.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பயணியர் நிழற்குடையும், செவ்வூர் ஊராட்சிக்குட்பட்ட செவ்வூர் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் 2021-22ன் கீழ் ரூ.23.57 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடமும் என மொத்தம் ரூ.206.10 இலட்சம் மதிப்பீட்டில் திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில், முடிவுற்ற 11 திட்ட பணிகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட ஊராட்சி பகுதிகளில் கூடுதல் தேவைகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து, தற்போது ஊராட்சியின் சார்பில் கோரிக்கைகளும் வரபெற்றுள்ளன. அப்பணிகளை அரசின் பல்வேறு திட்டங்களின் கீழும், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினராகிய என்னுடைய தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழும் அல்லது எனது சொந்த நிதியின் கீழும் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதுபோன்று பொதுமக்களின் தேவைகளை அறிந்து, அதில் தனிகவனம் செலுத்தி, தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் மூலம் பொதுமக்களை பயன்பெறச் செய்தும், கிராமப்புறங்களின் மேம்பாட்டிற்கு அடித்தளமாகவும், பல்வேறு திட்டங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் செயல்படுத்தி, பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறார் என கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் வானதி, திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சண்முகவடிவேல், இணை பதிவாளர் (கூட்டுறவு சங்கங்கள்) இராஜேந்திர பிரசாத், உதவி பொறியாளர்கள் ராமசாமி, வீரப்பன், ராஜ்குமார், திருப்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இராஜேந்திர குமார், காதர் மொய்தீன், ஊராட்சி மன்றத்தலைவர்கள் சுசிலா (கோட்டையிருப்பு), கண்ணன் (திருவுடையார்பட்டி), மாணிக்கவாசகம் (நெடுமறம்), அபிராமிகாந்தி (கண்டவராயன்பட்டி), ஜெயராணி (வையகளத்தூர் சுண்டக்காடு), தனலெட்சுமி (ஆ.தெக்கூர்), சத்தியவாணி (குமாரப்பேட்டை), சத்யா (வடக்கு இளையாத்தங்குடி), சேவங்கொடியோன் (சேவினிபட்டி), தையல்நாயகி (ஆவிணிபட்டி), அடைகப்பன் (செவ்வூர்) உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story