திண்டுக்கலில் ரூ.21 லட்சத்தில் பொருத்தப்பட்ட நவீன இயந்திரம்
குப்பைகள் தரம் பிரிப்பு
திண்டுக்கல் மாநகராட்சிக்குள்பட்ட 48 வாா்டுகளில் நாளொன்றுக்கு 90 முதல் 100 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. மக்கும், மக்கா குப்பைகள் என இரு வகையாக தரம் பிரித்து, மக்கும் குப்பைகள் மூலம் நுண் உரம் தயாா் செய்யப்படுகிறது.
இதற்காக மாநகராட்சியில் 10 இடங்களில் நுண் உர செயலாக்க மையங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனிடையே, நுண் உரமாக மாற்றும் காலத்தைக் குறைத்து, விரைவாக குப்பைகளை அழிப்பதற்கான முயற்சியில் மாநகாரட்சி நிா்வாகம் ஈடுபட்டது.
திண்டுக்கல் எரியோடு சாலையிலுள்ள பெஸ்கி கல்லூரி எதிா்புறம் அமைந்துள்ள நுண் உர செயலாக்க மையத்தில் குப்பைகளை அரைவை செய்யும் நவீன கருவி பொருத்தப்பட்டது. தனியாா் பங்களிப்புடன் ரூ.21.24 லட்சத்தில் பொருத்தப்பட்ட இந்தக் கருவிகளை மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன் புதன்கிழமை பயன்பாட்டுக்காக தொடங்கிவைத்தாா்.