சேவல் சண்டை நடத்திய 21 பேர் கைது

கைது செய்யப்பட்டவர்கள்
கரூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஆண்டுதோறும் சேவல் சண்டை நடந்து வந்தது. இதில் முறைகேடுகள் காணப்பட்டதால், சேவல் சண்டை நடத்துவதற்கு கடந்த சில வருடங்களாக அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், இந்த வருட பொங்கல் விழாவை முன்னிட்டு, மீண்டும் சேவல் சண்டை நடக்க வாய்ப்புள்ளதாக கருதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் அனைத்து பகுதிகளிலும் தனிப்படை போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதன் அடிப்படையில், அரவக்குறிச்சி காவல் எல்லைக்குட்பட்ட சேந்தமங்கலம் மேல் பாகம், வால் நாயக்கனூர், வேலம்பாடி, குரும்பட்டி, பொன்னவரம், நாகம்பள்ளி கிராமம், செல்லாண்டியம்மன் கோவில், மணல்மேடு, க.பரமத்தி காவல் எல்லைக்குட்பட்ட கொத்தம்பாளையம் பகுதிகளில் சேவல் சண்டை நடத்திய 21 நபர்கள் கைது செய்யப்பட்டு, ஆறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட நிர்வாகம் சேவல் சண்டை நடத்துவதற்கு அனுமதி அளித்துள்ளதாக, தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். அவ்வாறு தவறான தகவல் பரப்புவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் எச்சரித்துள்ளார். மாவட்டத்தில் சட்ட விரோதமாக சேவல் சண்டை நடத்துவது தெரிந்தால் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனிப்பிரிவு அலுவலக தொலைபேசி எண் 04324-296299 என்ற எண்ணுக்கு அல்லது அலைபேசி எண் 949810780 தொடர்பு கொண்டு புகார் அறிவிக்கலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
