ரெயிலில் கடத்தி வந்த 22 கிலோ கஞ்சா பறிமுதல்
பைல் படம்
வெளி மாநிலங்களில் இருந்து சேலம் ஜங்சன் ரெயில் நிலையம் வழியாக செல்லும் ரெயில்களில் கஞ்சா கடத்தி வருவதாக சேலம் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று காலை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுசுரேஷ்குமார், ரெயில்வே பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் பினு ஆகியோர் தலைமையில் போலீசார் ரெயில்களில் சோதனை நடத்தினர். காலை 7 மணிக்கு சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்துக்கு வந்த சாலிமர்-திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறி சோதனை நடத்தப்பட்டது.
அப்போது முன்பதிவில்லா பொதுப்பெட்டியில் 2 இடங்களில் 3 பைகள் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் வைக்கப்பட்டு இருந்தன. அந்த பைகளை எடுத்து போலீசார் சோதனை செய்தனர். இதில் மொத்தம் 22 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக அங்கிருந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.இதில் கஞ்சா கடத்தி வந்த நபர்கள் குறித்து உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சேலத்துக்கு கஞ்சா கடத்தி வந்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.