கல்லணைக் கால்வாயில் 22 டன் குப்பைகள் அகற்றம்

கல்லணைக் கால்வாய் பகுதியில் குவிந்திருந்த 22 டன் குப்பைகளை தஞ்சாவூர் மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.

தஞ்சாவூர் மாவட்டம், கல்லணையில் இருந்து புதுக்கோட்டை மாவட்டம் மும்பாலை வரையில், 149 கி.மீ தூரத்திற்கு கல்லணைக் கால்வாய் வெட்டப்பட்டது. இதன் மூலம் சுமார் 2.50 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. கல்லணைக் கால்வாயானது தஞ்சாவூர் மாநகராட்சி பகுதியான சிவாஜி நகர் முதல் இருபது கண்பாலம் வரையில் சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு கடந்து செல்லுகிறது. இந்நிலையில், கல்லணைக் கால்வாய்க் கரையில் வசிக்கும் பொதுமக்களும், கரை வழியாக செல்பவர்களும் கழிவுப்பொருட்களையும், குப்பைகளையும் போட்டு, கல்லணைக் கால்வாயை குப்பைத் தொட்டி போல பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும், கழிவுநீரையும் கால்வாயில் விட்டு வருகின்றனர். இதனால் கல்லணை கால்வாய் மாசடைந்து போனது. கழிவுநீரை கல்லணைக் கால்வாயில் கலப்பவர்கள் மீீது நடவடிக்கை எடுக்க மாநகராட்சி, நீர்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாமல் தண்ணீர் மாசடைந்து வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர். மேலும், பொறுப்பற்ற பொதுமக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையடுத்து, தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி, மாநகராட்சியில் உள்ள 690 தூய்மைப் பணியாளர்கள், குப்பை சேகரிக்கும் வாகனங்கள், ஜே.சி.பி, மூலம் ஆற்றில் கிடக்கும் பிளாஸ்டிக்பைகள், துணிகள், பாட்டில்கள் உள்ளிட்ட கழிவுப் பொருட்களை அகற்ற உத்தரவிட்டார். இதில், மாநகராட்சி மாநகர்நல அலுவலர் சுபாஷ்காந்தி தலைமையில், நான்கு குழுக்கள் பிரிக்கப்பட்டு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து மாநகர் நல அலுவலர் சுபாஷ்காந்தி கூறியதாவது: மாநகராட்சியின் 14 மண்டலங்களில் உள்ள தூய்மைப் பணியாளர்கள் மூலம், முதற்கட்டமாக இரண்டு நாள்கள் நடைபெற்ற பணி மூலம் கல்லணைக் கால்வாய் கரையோரங்களிலும், சில இடங்களில் கால்வாய் உள்ளேயும் கொட்டப்பட்டிருந்த 22 டன் எடை கொண்ட குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன. நீர்நிலைகளில் கொசு உற்பத்தியை தடுக்க எண்ணெய் பந்துகளை போட்டு வருகிறோம். இன்னும் ஒரு வாரத்தில் பணிகள் முடிவடையும்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags

Next Story