231 பயனாளிகளுக்கு ரூபாய் 2.16 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்
Sholavandan King 24x7 |31 July 2024 1:39 PM GMT
உசிலம்பட்டி அருகே குறவக்குடி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் வழங்கப்பட்டது
மதுரை மாவட்டம் குறவகுடி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 30 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டா ஆணை மற்றும் புதிய வீடு கட்டுவதற்கான உத்தரவு உட்பட மொத்தம் 231 பயனாளிகளுக்கு ரூபாய் 2.16 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா வழங்கினார். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டத்திற்குட்பட்ட குறவகுடி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, பல்வேறு அரசுத்துறைகளின் சார்பாக 231 பயனாளிகளுக்கு ரூபாய் 2 கோடியே 16 இலட்சத்து 06 ஆயிரத்து 899 மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா பேசியதாவது:- தமிழ்நாடு அரசு மக்கள் நலனுக்காக செயல்படுத்தி வரும் திட்டங்கள் அனைத்தும் பொதுமக்களுக்கு முழுமையாக சென்றடைய வேண்டும் என்ற நோக்கில், மக்களுடன் முதல்வர் திட்டம், உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் அரசுத்துறை அலுவலர்கள் கிராமப்புறங்களுக்கு நேரடியாகச் சென்று பொதுமக்களின் குறைகளுக்கு உடனடியாக தீர்வு காணும் வகையில் மக்கள் தொடர்பு திட்டம் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. உசிலம்பட்டி வட்டத்திற்குட்பட்ட குறவகுடி கிராமத்தில் இன்றைய தினம் நடைபெறும் இந்த மக்கள் தொடர்பு 231 பயனாளிகளுக்கு ரூபாய் 2 கோடியே 16 இலட்சத்து 06 ஆயிரத்து 899 மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் உணவு உற்பத்தி தன்னிறைவாக உள்ளது. மக்கள் தொகை பெருகி வரும் சூழலில் விளைநிலங்களின் பரப்பளவு குறைந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு மண் வளத்தை பாதுகாத்திடும் நோக்கில் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. மேலும் குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. 12-ஆம் வகுப்பு வரை இலவசக் கல்வி, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், சத்துணவுத் திட்டம், பெண் கல்வியை ஊக்குவிக்கும் புதுமைப் பெண் திட்டம் போன்ற திட்டங்கள் குழந்தைகளின் கல்வி வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. புதுமைப் பெண் திட்டத்தின் தொடர்ச்சியாக தற்போது 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கும் மாதம் ரூபாய் 1,000 உதவித்தொகை பெறும் ”தமிழ்ப் புதல்வன் திட்டம்” செயல்படுத்தப்படவுள்ளது. மேலும், ஊரகப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அடிப்படை ஆவணங்களான ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை தவறாமல் பதிவு செய்து பெற்றுக்கொள்ள வேண்டும். அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும் வங்கிக் கணக்குகள் மூலமாக பயனாளிக்கு நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது. எனவே, பொதுமக்கள் தங்களது பெயரில் தவறாமல் வங்கிக் கணக்கு தொடங்க வேண்டும். என மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா பேசினார். இந்த நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) டாக்டர்.மோனிகா ராணா, மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், உதவி ஆட்சியர் (பயிற்சி) செல்வி. வைஷ்ணவி பால், உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் பி.அய்யப்பன், வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் சங்கீதா,செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கப்பாண்டி, கீதா, உசிலம்பட்டி வட்டாட்சியர் பாலகிருஷ்ணன்,கூட்டுறவுத்துறை இணை பதிவாளர் குருமூர்த்தி உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story