மின்னொளியில் நடைபெற்ற 23வது மாநில கைப்பந்தாட்ட போட்டி
போட்டியை காண வந்தவர்கள்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா வடகரை அரங்கக்குடியில் உள்ள ஆர் ஜே எஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் மாநில அளவிலான 23 ஆம் ஆண்டு மின்னொளியில் கைப்பந்து போட்டி நடைபெற்றது.
முதல் நாள் போட்டியை மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே மீனா துவங்கி வைத்தார். 16 மற்றும் 17 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற போட்டிகளில் மயிலாடுதுறை, கடலூர், பாண்டிச்சேரி, இராமநாதபுரம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 30க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்று மோதிக்கொண்டன. இதனை அடுத்து நிறைவு நாளான இரண்டாம் நாள் போட்டியை பூம்புகார் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் நிவேதா முருகன் துவங்கி வைத்தார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியில் திருச்சி மாவட்டம் ஆர்ம்ட் போலீஸ் அணியும் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அணியும் மோதிக்கொண்டன. இதில் திருச்சி மாவட்டம் ஆர்மெட் போலீஸ் அணியினர் வெற்றி பெற்று கோப்பையுடன் முதல் பரிசு 20,000 ரூபாயை தட்டி சென்றனர். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அணியினர் இரண்டாவது பரிசு ரூ.15,000 பெற்றனர். மூன்றாவது பரிசை பாண்டிச்சேரி சேர்ந்த பூமையார்பாளையம் அணியும், நான்காவது, ஐந்தாவது மற்றும் ஆறாவது பரிசுகளை மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த செவன் ஸ்டார் அணி, நால்லாடை அணி,
ஆர்ஜேஎஸ் அரங்கக்குடி வடகரை அணிகள் பெற்றனர். மின்னொளியில் நடைபெற்ற இந்த போட்டியில் ஏராளமானோர் பார்வையிட்டனர்.